விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் !

கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழக முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக, கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தனியார் நிறுவனங்கள், பண்ணைகளுக்கு கோழி குஞ்சுகள் மற்றும் தீவனங்களை விநியோகம் செய்ய விடாமல் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தடுத்து வருவதாகக் கூறி, கறிக்கோழி உற்பத்தி தனியார் நிறுவனங்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த 14 ஆம் தேதி அதிகாலை திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் காவல் நிலையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் உடுமலை காவல் நிலையத்திலும் விவசாய சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஈசன் முருகசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் கைதானதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு குற்றவியல் நீதிபதி உமாதேவி பிப்ரவரி 3 ஆம் தேதியன்று ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து உடுமலை காவல் நிலையத்தில் இது தொடர்பான மற்றொரு வழக்கில் உடுமலை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அப்போது பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஈசன் முருகசாமி உடுமலை நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்படும் தகவலறிந்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், விவசாயிகள் ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. கைது நடவடிக்கையின் போது விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபடலாம் என கருதப்பட்ட நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.



