தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு பதிலாக ஆளுமை செய்யும் ஆண் உறவினர்கள்..!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. பரமக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளது. இதில் பார்த்திபனூர் அருகேயுள்ள நெல்மடூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்க்கு பஞ்சாயத்து தலைவி சுகன்யா தலைமை வகித்தார். பரமக்குடி பிடிஓ சந்திரமோகன், ஒன்றிய சேர்மன் சிந்தாமணி, ஏபிடிஓ., அரசு அலுவலர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஒன்றிய பெருந்தலைவர் சிந்தாமணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து வரவேற்பு செய்தார்.
கிராம மக்கள் முன்னிலையில் தேசியக்கொடியை ஏற்றி அனைவரும் கொடிவணக்கம் செய்தனர். கிராம மக்கள் குலவை சத்தம் போட்டு ஒலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த கிராமசபை கூட்டத்தில் திறந்தவெளி கழிப்பறை, குடிதண்ணீர், போக்குவரத்து, சாலை வசதிகள் குறித்து விவாதிக்கபட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம சபையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது ஒன்றிய பெருந்தலைவர் சிந்தாமணிக்கு பதிலாக அவரது கணவர் முத்தையா கிராம மக்களிடம் நன்றி தெரிவித்து உரையாற்றினார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர் சுகன்யா தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என ஒரு வரியில் பேசி முடித்துக் கொண்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெண்களுக்கான திட்டங்கள் ஆண் ஆளுமையால் இன்றளவும் நிறைவடையாமல் உள்ளதற்கு இது போன்ற நிகழ்வுகள் சாட்சியாக உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களின் உரிமைக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகித இடங்கள் ஒதுக்கீடு செய்தார்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் கொண்டு கணிக்க முடியாது. அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். பெண்களின் திறமையும் ஆற்றலும் வெளிப்படுத்தப்பட்டு சமுதாயத்துடன் ஒருங்கிணைந்த அங்கமாக திகழும் போது வளர்ச்சி பன்மடங்காக உயரும். எனவே பெண்களின் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு புதுமை திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்று அறிக்கையில் தெரிவித்தார் என செய்தித்தாளில் வெளியானது.
ஆனால் தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி வெற்றிபெற்ற பெண்களை தந்தை, சகோதரர், கணவன், மகன் போன்ற உறவுகளே ஆண் ஆதிக்க ஆளுமைகளாக செயல்பட்டு வருகின்றனர் என்பதற்கு இன்றைய நிகழ்வு வலு சேர்ப்பதாக உள்ளது.
கிராம சபை கூட்டத்தினை தொடர்ந்து நெல்மடூர் கிராமத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கவுள்ள சாலை பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.
- சேகர்