கோவில் நிலம் ஆக்கிரமிப்பு – ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் உள்ள பொன் அரியசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரை – பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இக்கோவில் 300 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 5 ஏக்கர் 19 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலங்கள் கோவில் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு, முறையாக பதிவு செய்யபட்டு பூசாரிகள் பெயரில் ஆவணங்கள் உள்ளது.
இந்த நிலையில் மேலபார்த்திபனூர் ஊராட்சி மன்றத்தலலவர் சண்முகவேலும் , ஊராட்சி நிர்வாகமும் இணைந்து பூசாரிகளுக்கு வழங்கப்பட்ட கோவில் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அந்த இடத்தை சுத்தப்படுத்த துவங்கியது. இந்த இடத்தில் தமிழக அரசின் குறுங்காடு திட்டத்தை செயல்படுத்த ஊராட்சி மன்ற தலைவர் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பதாக கூறப்படுகிறது.
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதை அறிந்த அந்த நிலத்தின் உரிமையாளர்களான கோவில் பூசாரிகள் பார்த்திபனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வருவாய்துறை அதிகாரிகள் பூசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தடை உத்தரவு காலம் முடிந்த பின்னர் இது குறித்து பேசி முடிவெடுக்கலாம் என்றும், தற்போது இந்த இடத்தில் பணிகள் எதுவும் நடக்காது என கூறியதையடுத்து பூசாரிகள் கலைந்து சென்றனர்.
பார்த்திபனூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காவல்துறையினர் தங்களுக்கு எதிராக செயல்பட்டு, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய முயல்கின்றனர். இவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பூசாரிகளின் கோரிக்கையாக உள்ளது.