பொன்மகள் வந்தாள்..! : மோதும் தயாரிப்பாளர்கள் – தியேட்டர் உரிமையாளர்கள்
நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடித்து இன்னும் திரைக்கே வராத “பொன்மகள் வந்தாள்” என்ற புதிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் மார்க்கெட்டில் இருமடங்கு விலைக்கு விற்றதன் மூலம், தமிழ்த் திரை உலகில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு சூர்யா புது ரூட்டு போட்டு கொடுத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவை வைத்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தின் இறுதிகட்டப்பணிகள் முழுவதுமாக முடிவடைந்து மார்ச் 28 ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கு மற்றும் சிட்டியில் அதிக திரையரங்குகளை கொண்ட மால்கள் மூடப்பட்டதால் படத்தை வெளியிடமுடியவில்லை..!
இந்த நிலையில்தனது டூடி எண்டர்டெயின்மெண்ட் படங்களை திரையரங்கில் வெளியிட்ட பின் டிஜிட்டல் பிளாட்பார்மில்அமேசானுக்கு விற்றுவந்த சூர்யா, முதல் முறையாக திரையரங்கிற்கே வராத பொன்மகள் வந்தாள்படத்தை அமேசானுக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகின்றது. சுமார் நான்கரை கோடி ரூபாயில்தயாரிக்கப்பட்ட பொன்மகள் வந்தாள் படத்தை 9 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் பிரைம் வாங்கிஉள்ளதாக சொல்லப்படுகின்றது. படத்தின் பட்ஜெட்டை விட இரு மடங்கு விலைக்கு டிஜிட்டலில்படம் விற்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகின்றது.
திரைஉலகில் இத்தனை காலமும் தங்கள் குடும்ப வளர்சிக்கு உதவிய விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களை பற்றி சிந்திக்காமல் சூர்யா துரோகம் இளைத்து விட்டதாக ஒரு தரப்பு கொதித்துக் கொண்டிருக்க, சிறுபட தயாரிப்பாளர்கள் சூர்யாவை பாராட்டி வருகின்றனர்.
வட்டிக்கு பணம் வாங்கி தயாரித்து முடித்த தங்கள் படத்தை வெளியிட தியேட்டர் கிடைக்கவில்லை என்று புலம்பிய நிலையை மாற்றி, தயாரிப்பாளர்களுக்கு புதிய வியாபார பாதையை சூர்யா அமைத்துக் கொடுத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்
சினிமா வணிகம் சார்ந்தது. தற்போதைய நிலையில் திரையரங்குகள் முழு செயல்பாட்டிற்கு வர இன்னும் இரு மாதங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. தயாரிப்பாளருக்கு போட்ட முதல் கைக்கு வர வேண்டுமானால் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற புதுப் புது பாதைகளை வகுத்துக் கொண்டால் மட்டுமே திரை உலகில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதை சத்தமில்லாமல் தனது சொந்த படம் மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளார் சூர்யா..!
இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அவர் தயாரித்து நடித்துள்ள சூரரைபோற்று படத்தை திரையரங்குகளில் வெளியிடபோவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ் திரை உலகிற்குள்அமேசானை கொண்டு வந்தது சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபு என்றும், அவரது ட்ரீம் வாரியர்நிறுவனத்தின் படங்களையும் வெளியிடபோவதில்லை என்றும் அறிவித்து உள்ளனர்.
ஊடரங்கால் திரையுலகமே முடங்கி கிடக்க சூர்யா மட்டும் இருமடங்கு லாபத்துடன் வியாபாரம் செய்தால் மற்றவர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்..?, இதுதான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள திரை உலகினர், காலமாற்றத்துக்கு ஏற்ப சினிமா வியாபாரத்தை விரிவாக்கிக் கொள்வது ஒன்றும் தவறில்லை என்றும் திரையரங்குகளில் பாப்கார்ன், பப்ஸுக்கு அதிக விலை கொடுக்காமலேயே புதிய படத்தை இனி வீட்டில் இருந்தபடியே டிஜிட்டலில் பார்க்க வழிசெய்து கொடுத்துள்ளார் சூர்யா என்கின்றனர் சிறு பட தயாரிப்பாளர்கள்..!
திரைப்படங்களை தியேட்டரில் வெளியிடுவதா? டிஜிட்டல் தளங்களில் வெளியிடுவதா ? என்று திரையரங்கு உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் மோதிக் கொண்டிருக்கும் சூழலில் சென்னையில் பிரபல மால் திரையரங்குகளில் புகுந்த எலிகள் இருக்கைகளையும், சவுண்ட் சிஸ்டங்களையும் கடித்து கந்தலாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் திரையரங்குகளுக்கு பூட்டுபோட்டு 40 தினங்கள் கடந்துவிட்ட நிலையில் மீண்டும் எப்போது மீண்டு செயல்பட தொடங்கும் என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.
ஒரு சில திரையரங்குகளை வைத்துள்ள தியேட்டர் அதிபர்கள் தங்கள் பணியாளர்கள் மூலம் திரையரங்குகளை முழுமையாக கிருமி நாசினி தெளித்து, வாரத்திற்கு ஒரு முறையாவது ஏதாவது படத்தை திரையிட்டு பரீட்சார்த்த முறையில் வெளியிட்டு பார்த்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
ஆனால் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் மால்களில் திரையரங்குகளை நடத்திவந்த தனியார் நிறுவனங்கள் தங்கள் திரையரங்குகளை திறந்து பராமரிக்க இயலாத நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சென்னையில் பிரபலமான மாலில் உள்ள திரையரங்குகளில் எலி புகுந்து வேட்டை நடத்தி உள்ளது. பார்வையாளர் இருக்கை தொடங்கி, அங்குள்ள விலை உயர்ந்த சவுண்டு சிஸ்டங்களை எல்லாம் எலிகள் வெட்டி கந்தலாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் தான் திரையரங்குகள் முழுமையான செயல்பட்டிற்கு வர குறைந்தது 3 மாதங்களாவது பிடிக்கும் என்ற நிலையில் படம் தயாரிக்க வாங்கிய கடனுக்கு எகிறும் வட்டியை கணக்கில் கொண்டு தான் சூர்யா தனது பொன்மகள் வந்தாள் படத்தை, நேரடியாக டிஜிட்டலில் விற்றுள்ளார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
சூர்யாவை பின்பற்றி சித்தார்த்தின் புதிய படம், யோகிபாபுவின் காக்டெயில் உள்ளிட்ட 8 படங்கள் நேரடியாக ஓடிடியில் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தயாரிப்பாளர்களின் இந்த முடிவுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்ஓடிடியில் படங்களை விற்பது தங்களது உரிமை என்று ஆவேசப்படும் தயாரிப்பாளர்கள், திரையரங்குகளில்சிறுபடங்களை திரையிடுவதில்லை என்றும், பாப்கார்னுக்கு அதிகவிலை வாங்குகிறார்கள் என்றும்.,இனி எவராவது பேசினால் நல்லா இருக்காது என்று திருப்பூர் சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்திருந்தார்.
திருப்பூர் சுப்பிரமணியத்தின் பேச்சு தயாரிப்பாளர்களை மட்டுமல்ல திரையரங்கிற்கு படம் பார்க்க செல்லும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது, பாப்கார்ன் விலையை நிர்ணயிப்பது எங்கள் உரிமை என்று கறாராக பேசிய திருப்பூர் சுப்பிரமணியம், தனது பக்கம் உள்ள நியாத்தை விளக்கும் வகையில் மீண்டும் ஒரு குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நலிவடைந்த தயாரிப்பாளர் தனது படத்தை ஓடிடியில் விற்றால் பரவாயில்லை, நல்ல நிலையில் இருக்கும் சூர்யா போன்றோர் செய்ததால் சுட்டிக்காட்ட வேண்டியதாகி விட்டது என்று தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு முடிந்த பின்னர் தயாரிப்பாளர், வினியோகஸ்ர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அமர்ந்து பேசி ஓடிடி விவகாரத்தை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற தயாரிப்பாளர்கள் தெரிவித்த முடிவையும் திருப்பூர் சுப்பிரமணியம் ஏற்றுக் கொண்டுள்ளார்.
டிக்கெட் கட்டணத்திலும், அங்கு விற்கப்படும் பாப்கார்ன் குளிர்பானம் விலையிலும் சலுகைகள் வழங்காமல் வீம்பு செய்தால் குடும்பத்துடன் திரையரங்கிற்கு ரசிகர்களை ஈர்ப்பது முற்றிலும் நின்றுபோகும் வாய்ப்பு உள்ளது. இதை திரையரங்கு உரிமையாளர்கள் உணராதவரை இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படபோவது இல்லை..!