அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்..! : கண்டுகொள்ளாத அதிகாரிகள்…
சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் அருகே பளூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததாக அதே ஊரைச் சேர்ந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் மீது பளூர் கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பளூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்பவர் ஆக்கிரமித்து கல்தூண்களை நட்டு கம்பிவேலி அமைத்து அராஜகம் செய்து வருவதாக காளையார் கோவில் காவல் நிலையத்தில் அதே ஊரைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மனைவி இந்து ராணி என்பவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து முத்தையா கூறுகையில், “ எங்கள் ஊர் கிராம பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அங்கம்மா ஊரணியைச் சுற்றி கல்தூண்களை நட்டு கம்பி வேலி அமைத்து கால்நடைகள் உள்ளே நுழைந்து அசுத்தம் செய்யாமல் பாதுகாத்து வைத்திருந்தோம். இந்த ஊரணியில் இருக்கும் தண்ணீரைத்தான் கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தோம்.
தற்போது அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜா என்பவர் இந்த ஊரணியைச் சுற்றி நடப்பட்ட கல்தூண்களையும், கம்பி வேலிகளையும் தோண்டி எடுத்துக் கொண்டு, அரசு புறம்போக்கு நிலத்தில் நட்டு வைத்துக் கொண்டு சொந்தம் கொண்டாடி வருகிறார். இதனைத் தட்டிக் கேட்ட என்னையும் எனது மனைவியையும் அடித்து விரட்டி விட்டார்.
அதனால் நான் காளையார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். காவல்துறையினரும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் ஆகிய மூவரும் விசாரணை செய்யும்போது அவர்களையும் மிரட்டியதாக ராஜா மீது புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளது.” இவ்வாறு முத்தையா கூறினார்.
பளூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்துச்சாமி கூறுகையில், மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக ஊரணியைச் சுற்றி கல்தூண்களை நட்டு கம்பி வேலி அமைத்து ஆடு, மாடுகள் உள்ளே நுழையாமல் பாதுகாத்து வந்தோம். தற்போது தண்ணீர் இல்லாத காரணத்தால் அவரவர் தேவைகளுக்காக கல்தூண்களை தோண்டி எடுத்துச் சென்று விட்டார்கள். தலைமை ஆசிரியர் ராஜா சில வருடங்களாக அனுபவித்து வந்த இடம் காளி கோவிலுக்குச் சொந்தமான அங்கம்மாள் ஊரணியைச் சேர்ந்த இடம். அவர் அனுபவித்து வந்த இடத்தை தற்போது வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டு வருகிறார். அவருக்கு பட்டா எதுவும் அந்த இடத்திற்கு கொடுக்கவில்லை. எப்படியாவது பட்டா வாங்கி விடலாம் என்ற ஆசையில் இவ்வாறு செயல்படுகிறார்.
அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் பளூர் ராஜா மீது ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காளையார் கோவில் தாலுகா அலுவலகம், பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் போன்ற பல்வேறு இடங்களில் புகார் அளித்துள்ளதாக கூறுகிறார்கள்.
அரசுப் புறம்போக்கு நிலத்தை அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரே ஆக்கிரமித்துள்ளதால் இவர் பாடம் சொல்லித்தரும் குழந்தைகள் ஒழுக்கமாக இருப்பார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள் அப்பகுதி மக்கள். அரசு அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்த செய்தி வெளிவந்த பிறகாவது நடவடிக்கை எடுக்கிறார்களா பார்ப்போம் என்கிறார்கள்.
ஏக்கத்துடன் காத்திருக்கும் பளூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள் ராஜா ஆக்கிரமித்து வைத்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்பார்களா? மீட்பார்கள் என்ற நம்பிக்கையில் நாமும் காத்திருப்போம்.
- பொன்ராஜ்