பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம் -: அசத்தும் அரசு பள்ளி ஆசிரியை…
ஐம்பது வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை, மருத்துவம் சாராத கொரோனா தடுப்புப் பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின்பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூடுதல் பணியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.இதனால் ஆசிரியர்களைப் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சுயவிருப்பத்துடன்வரவிரும்பும், ஐம்பது வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்களை கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தலாம்என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும் மருத்துவம் சாராத கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளில் தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையினரும் உள்ளாட்சிப் பணியாளர்களும் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா கீழபெருங்கரையில் பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கி அரசு பள்ளி ஆசிரியை அசத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தைக்கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதில், முக்கிய நடவடிக்கையாக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவால் தினசரி வேலைக்கு செல்வோர், கூலி வேலை பார்ப்பவர்கள் என பல தரப்பினர்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவர்களின்பெற்றோர்கள் போதுமான வருமானம் இன்றி மிகவும் சிரமபடுகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள கீழபெருங்கரை அரசு நடுநிலை பள்ளியில் சுமார் 40 மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு தலைமையாசிரியையாக உமா மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த செலவில் 40 பள்ளி மாணவர்களுக்கும் தலா 5 கிலோ அரிசி சிப்பம், முககவசம், வைட்டமின்கள் மாத்திரைகள் வழங்கினார்.
மேலும் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டும். போதுமான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஊரடங்கு உத்தரவு நீடிக்கபட்டால் தொடர்ந்து நிவாரணம் வழங்குவேன் என ஆசிரியை கூறினார். தனது சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கி அசத்திய தலைமையாசிரியை உமாவை கிராம மக்கள் பாராட்டினர்.
– ராஜா