அரசியல்

கிரண்பேடி மீதான முறைகேடுகளை தேசிய அளவுக்கு கொண்டுசெல்வேன்… : புதுச்சேரி அமைச்சர் அதிரடி..!

ஆளுநர் கிரண்பேடி மீதான முறைகேடுகளை தேசிய அளவில் கொண்டு செல்வேன் என புதுச்சேரியின் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார்.

துணைநிலைஆளுநர் கிரண்பேடி மீது  பல்வேறுகுற்றச்சாட்டுக்களை சில தினங்களுக்கு முன்புஅமைச்சர் மல்லாடி முன்வைத்தார். அவைஅனைத்தும் பொய் என்றும் அவற்றுக்குப்பதில் சொல்லப் போவதில்லை என்றும்கிரண்பேடி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் கிரண்பேடி மீது அமைச்சர் புகார் கூறியுள்ளார். தான் ஒரு  திறந்த புத்தகம் என கிரண்பேடி கூறுவது தவறு; அவர் மீது பல முறைகேடுகள் உள்ளன. அனைத்தையும் தேசிய அளவில் கொண்டு செல்வேன் என்று கூறிய அவர், மாதம் 50 லட்சம் ரூபாய் வரை புதுச்சேரி ராஜ்நிவாசில் கிரண்பேடி செலவு செய்கிறார். ஆனால், பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் புதுச்சேரிக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தரவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய் எனக் கூறும் கிரண்பேடி எழுத்துப்பூர்வமாக தவறு இல்லை என எழுதி கொடுக்க வேண்டும் என்றும் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் கேட்டு மே 1-ம் தேதி கடிதம் கொடுத்தால் வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் மல்லாடி தெரிவித்தார்.

மாதம்தோறும் 3.5 லட்சம் ரூபாய் அரசு நிதியில் செலவிட்டு தனது நிகழ்வுகளை கிரண்பேடி படம் பிடிக்கிறார். இலங்கையில் உள்ள என் மகனை சொந்தச் செலவில் சந்தித்து வருவதைத் தவறாக கிரண்பேடி திசைதிருப்புகிறார். பத்மஸ்ரீ விருதுக்குத் தன்னை அரசு பரிந்துரை செய்ததை நீக்கியவர் கிரண்பேடி. இதுவே என் மீது அவர் கொண்டுள்ள தனிப்பட்ட விரோதத்திற்குக் காரணம்.

கொரோனா பரவல் பற்றி பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 பேர். இந்திரா காந்தி அரசு கொரோனா மருத்துவப் பிரிவில் சிகிச்சை பெற்ற 3 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். ஜிப்மரில்  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும், மாஹி பகுதியில் ஒருவரும் என 6 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். புதுச்சேரியில் நோய் உருவாகவில்லை; நோய்த் தொற்றும் இல்லை. இருப்பினும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நோய்த் தொற்று இருப்பதால் எல்லைகள் அனைத்தும் மூட அரசுக்கு சுகாதார துறை வலியுறுத்துகிறது. கோயம்பேடு சென்று வந்த விழுப்புரம் மாவட்டத்தின் ராதாபுரத்தைச் சேர்ந்த சிலருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள சாலைகளை மூடவும் 120 பறக்கும் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

நமதுநிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button