நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு..! : மு.க.ஸ்டாலின் கண்டனம்
நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பராமரிக்க டெண்டர் வெளியிடப் பட்டுள்ளதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை நாம் சுட்டிக்காட்டினால், “பேரிடர் நேரத்தில் கூடவா அரசியல்” என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வி கேட்பார். ஆனால், ஊரடங்கு நேரத்திலும் – ஒரு டெண்டரை விட்டு – அதிலுள்ள முறைகேடுகள் உயர் நீதிமன்ற விசாரணைக்குப் போயிருக்கிறது என சுட்டிக்காடியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு, காணொலி விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில் கூறப்பட்டுள்ள முறைகேடுகள் அ.தி.மு.க. அரசின் ஊழல் சாம்ராஜ்யத்திற்கு “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” போல் இருக்கிறது. துரை ஜெயக்குமார் என்ற பதிவுபெற்ற முதல் நிலை ஒப்பந்தக்காரர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், ”தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை உப கோட்டங்களில் 462.11கி.மீ. நீள நெடுஞ்சாலைத்துறை சாலைகளை ஐந்து வருடங்கள் பராமரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கான ஆன்லைன் டெண்டர் தாக்கல் செய்ய கடைசி நாள் 15.4.2020 என குறிப்பிடப்பட்டுள்ளது. 32 பதிவு பெற்ற முதல்நிலை ஒப்பந்ததாரர்கள் செய்யும் வேலையை ஒரேயொரு ஒப்பந்ததாரருக்கு (விளிழிளிறிளிலிசீ) வழங்கும் விதத்தில் இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது” என மனுதாரர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
“இந்த டெண்டரில் கூறப்பட்டுள்ள பணிகள் 500 கோடி ரூபாய் மட்டுமே மதிப்பிலானவை. ஆனால், 1165 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இது 700 கோடி ரூபாய் வரை அதிகம்” என்றும் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அது தவிர “அரசு ஆணையில் உள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும் – டெண்டரில் உள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும் வேறுபாடு இருக்கிறது” என்பதையும் விளக்கிக் கூறியிருக்கும் அந்த மனுதாரர், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களை மனதில் வைத்து, டெண்டருக்கான தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், கொரோனா பணிகளுக்கு இடையிலும் டெண்டரில் பழனிசாமி அவசரம் காட்டியது ஏன். சாலை பராமரிப்புக்கான, ஐந்து வருட பணிகளுக்கு டெண்டர் விடுவதற்கு ஊரடங்கு முடிவிற்கு வரும் வரை ஏன் முதலமைச்சர் பொறுத்திருக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நீதியின் சக்கரம் நிற்காமல், நிச்சயம் சுழன்றே தீரும்! அப்போது ஊரடங்கு நேர ஊழல்களும், கொரோனா கால கொள்ளைகளும், டெண்டர் முறைகேடுகளும் மக்கள் மன்றத்திற்கு வந்தே தீரும்! எந்த ஊழலில் இருந்தும் யாரும் தப்பி விட முடியாது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” எனவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
– நமது நிருபர்