ராஜான்னா பயமா ? கருணாஸ்னா தொக்கா ?
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக காவல்துறையையும்,நீதித்துறையையும் கடுமையாக விமர்சனம் செய்தார் பாஜக தேசிய செயலாளர் H ராஜா . அதனால் உயர்நீதிமன்ற நீதிபதிகளே தானாக முன்வந்து வழக்கு கொடுத்தனர். அதன் பிறகு தான் தமிழக காவல்துறை ராஜா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ராஜாவின் அநாகரீகமற்ற பேச்சால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று வரை ராஜாவை நெருங்க காவல்துறை பயப்படுகிறது.
இதற்கு முன் பெண் பத்திரிகையாளரை கேவளமாகப்பேசி பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளானார் நடிகர் எஸ்வி சேகர். அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு ,உயர்நீதிமன்றம் அவரை கைது பண்ண சொல்லியும் கைது செய்ய பயந்தது தமிழக காவல்துறை.
சில தினங்களுக்கு முன் நடிகர் கருணாஸ் தனது முக்குலத்தோர் புலிப்படையின் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக அரசையும்.காவல்துறையையும் விமர்சித்து பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் செய்தியாளர்கள் மத்தியில் வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகும் ஏதோ தீவிரவாதியை பிடிப்பதுபோல் அதிகாலையில் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து பலவேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து ராஜாவை கண்டு பயப்படும் தமிழக காவல்துறை கருணாஸை தொக்காக நினைத்து கைது செய்திருக்கிறது என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், “கருணாஸ் தான் பேசிய பேச்சுக்கு தனது வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கேட்ட பின்னர் அவரை உடனடியாக கைது செய்கின்ற இந்த அரசாங்கம் ஒரு இரட்டை ஆட்சி செய்கிறது என்றுதான் தெரிகிறது. மத்திய அரசுக்கு வேண்டியவர்கள் மத்திய அரசை சார்ந்தவர்களுக்கு ஓர் அதிகாரம். தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக பாடுபடுகிறவர்களுக்கு ஒரு தனி அதிகாரம் என்கின்ற வகையில் தமிழ்நாட்டில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இதற்கு முன்னாள் நடிகர் எஸ்.வி.சேகர் பெண்களை மிகவும் கேவலமாக இழிவு படுத்தி பேசினார். அவர் மீது உயர்நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவிட்டது. ஆனாலும் அப்போதும் தனிப்படை என்ற பெயரில் காவல்துறை தேடிவருவதாக கூறினார்கள். ஆனால் அமைச்சர் வீட்டில் நடைபெற்ற திருமண விழாவிலே கூட கலந்து கொண்டார். அவர் உச்சநீதிமன்றம் சென்று ஜாமீன் வாங்கி வரும்வரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதேபோல் தான் தற்போது எச்.ராஜா தொடர்ந்து தமிழ்நாட்டிலே மக்களால் வெறுக்கப்பட்டு மக்களால் விமர்சிக்கப்படுகின்ற நபர் எச்.ராஜா. அவர் தொடர்ந்து பெண்களை இழிவாக பேசினார். அறநிலையத்துறை அதிகாரிகளையும், பெண்களையும் இழிவாக பேசுகிறார். பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசினார். அதனால் தமிழகத்திலே கலவரங்கள் ஏற்பட்டது. தற்போது மக்கள் உயர்வாக மதிக்கின்ற உயர்நீதிமன்றத்தையே இழிவாக பேசி நீதிமன்றத்தைப் பற்றி கவலைப்பட வில்லை என்று பேசுகிறார். காவல்துறை அதிகாரியை மிரட்டுகிறார். இதுபோன்ற சம்பவங்கள் அடங்கிய வீடியோ அனைத்து ஊடகங்களிலும் வந்தது. வழக்கமாக தமிழக அரசும் காவல்துறையும் தனிப்படை என்ற பெயரிலே ஒரு குழுவை அமைத்தது. ஆனால் இன்று வரை அவரை கைது செய்ய வில்லை. சமீபத்தில் நாகை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் இரண்டு டிஎஸ்பிக்கள், எட்டு இன்ஸ்பெக்டர்கள், 110 காவலர்கள் பாதுகாப்பு அளித்தனர். ஆனாலும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதேநேரத்தில் நடிகர் கருணாஸ் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகின்ற ஒரு கட்சியின் தலைவர். அவர் தன்னுடைய ஆதங்கத்திலோ, வேதனையிலோ தன் ஜாதியை சொல்லி பேசியதை தவறாக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தான் பேசியது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்டபின்பும் அவரை கைது செய்த இந்த காவல்துறை எச்.ராஜாவை கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள். யார் பிடியில் இந்த ஆட்சி நடைபெறுகிறது. யாருக்காக இந்த ஆட்சி நடக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக மக்கள் உணருகின்றார்கள். மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மக்களே எச்.ராஜாவை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் காலம் வந்துவிடும். காவல்துறை எச்சரிக்கையுடன் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ராஜாவை கைது செய்யவில்லை. மக்களே ராஜாவை பிடித்து நீதிமன்றத்திலோ, காவல்நிலையத்திலோ ஒப்படைக்கும் நிலையை காவல்துறை ஏற்படுத்திக் கொடுக்காமல் சட்டம் அனைவருக்குமே சமம் என்பதை உணர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
அரசின் இந்த செயல்பாட்டிற்கு அரசியல் தலைவர்கள் விடுத்துள்ள கண்டனங்கள் பின்வருமாறு,
தமிழக காவல்துறை மத்திய ஆட்சியாளர்களின் விருப்பப்படி செயல்படும் அமைப்பாக மாறியுள்ளது என மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஆளுக்கு ஒரு நீதி வேலைக்கு ஒரு நியாயம் என பாகுபாடு காட்டப்படுவது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கொங்கு இளைஞர் பேரவைத்தலைவர் தனியரசு, மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் தமிமுன் அன்சாரி, பச்சைத்தமிழகம் கட்சித்தலைவர் சு.ப.உதயகுமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருணாஸுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
சட்டம் சிலர் விஷயத்தில் செயல்படுகிறது, சிலர் விஷயத்தில் சலுகை அளிக்கிறது என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.