நிவாரண உதவி என்ற பெயரில் மூத்த கலைஞர்களை அவமானப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளும் எழுத்தாளர்கள் சங்கம்!
கொரானா கொடூரத்தால் முடங்கி உள்ள திரைத்துறையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய திரைப்பிரபலங்கள் பெப்சிக்கு நிவாரண பொருட்களையும், நிதி உதவியையும் அளித்தனர்.
இந்த உதவிகளை பெற்றுக் கொண்ட பெப்சி அதை தனது கூட்டமைப்பில் உள்ள சங்கங்களுக்கு பிரித்து கொடுத்தது. பெப்சிக்கு வந்த எல்லா உதவிகளும் முறையாக பிரித்து கொடுத்ததா எனற கேள்விக்கு பின்னர் வருவோம்.
அப்படி வழங்கப்பட்டநிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட சங்கங்களில் ஒரு சில சங்கங்களைத் தவிர மற்றவர்கள் தங்கள் உறுப்பினர்களுக்குசத்தமில்லாமல் கொடுத்து வருகிறது.
அதில் குறிப்பாக திரைத்துறையில் படைப்புகளை உருவாக்கி சாதனை படைத்த மூத்த உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் இயக்குனர் சங்கத்திலும், எழுத்தாளர்கள் சங்கத்திலும் இந்த நிவாரண பொருட்களை வழங்கும் செயலை ஒரு விளம்பரமாக செய்து பெப்சி தலைவர் செல்வமணிக்கு சீப் பப்ளிசிட்டி தேடிக்கொடுக்கும் வேலையில் சிலர் இறங்கி இருக்கிறார்கள்.
மூத்த படைப்பாளிகள் ஆரூர்தாஸ், காமகோடியான் உள்ளிட்ட பலருக்கும் நிவாரண உதவியாக அரிசி மூட்டையை டிகே.சண்முகசுந்தரம், ரங்கநாதன் இன்னும் சிலர் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் இயக்குனர் சங்கத்தின் மூலம் பல குழுகளுக்கு பகிரப்பட்டது.
மூத்த படைப்பாளிகளுக்கு நிவாரணம் தரும்போது அதை படம் எடுத்து விளம்பரப்படுத்தி அந்த மூத்த படைப்பாளிகளை அவமானப்படுத்தச் சொன்னது யார்? அல்லது அவர்களுக்கு தன் பாக்கெட்டில் இருந்து உதவி கொடுத்தது போல “ஆர்.கே.செல்வமணிக்கு நன்றி” என்று விளம்பரப்படுத்திக் கொள்வது ஏன்?
யாரோ நல்ல மனம் படைத்தவர்கள் கொடுத்த உதவியை யாருக்கும் தெரியாமல் செய்வதுதான் சிறந்த நிர்வாகத்துக்கு அழகு. அதை விட்டு விட்டு நிவாரண உதவி செய்த படங்களை எடுத்து விளம்பரப்படுத்திக் கொண்டு வருகிற சங்க தேர்தலில் ஓட்டுக்களை வாங்கி கொள்வதற்காக சீப் பப்ளிசிட்டி தேடிக் கொள்வது போல இருக்கிறது.
அதோடு, இப்படி நிவாரண பொருட்களை வழங்க வீடு வீடாக செல்லும் டி.கே.சண்முகசுந்தரம், ரங்கநாதன் உள்ளிட்ட சிலருக்கு தினப்படியாக “பேட்டா” கணக்கும் எழுத்தாளர்கள் சங்கத்தில் எழுதப்படுகிறது. தன்னார்வலர்களாக சேவை மனப்பான்மையுடன் தங்களது உறுப்பினர்களுக்கு யாரோ கொடுத்த உதவிகளை வழங்க இப்படி பேட்டா வாங்கிக் கொள்வதோடு, ஏதோ சேவை செய்வது போல நிவாரண உதவி போட்டோக்களை எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் இது போன்ற நடவடிக்கைகளை பெப்சி தலைவர் செல்வம்ணி ஏன் கண்டிக்காமல் இருக்கிறார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
காரணம், இந்த போட்டோ விளம்பர பிரியர்களுக்கு தலைவராக இருக்கும் அவரும் இவர்களைவிட பிரமாண்டமான விளம்பர பிரியர் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். சில தினங்களுக்கு முன் அவசியமே இல்லாமல் செல்வமணி நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பு மிக முக்கியமானது. காரணம் “முதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி சார்பில் நிதி கொடுப்பதற்காக அந்த பிரஸ்மீட்” ஒரு அறிக்கையில் சொல்ல வேண்டிய விஷயத்தை செய்தியாளர்களை வரவழைத்து டிவி கேமராக்கள் முன்பு சொல்லி விளம்பரம் தேடிக் கொண்டதுதான் மிச்சம். தலைமையே இப்படி விளம்பர விரும்பியாக இருக்கும் போது அவரின் சீடர்கள் எப்படி இருப்பார்கள்.
தயவு செய்து இனிமேலாவது நிவாரண உதவிகளை உறுப்பினர்களுக்கு வழங்கும்போது போட்டோ எடுத்து அதை பொது வெளியில் வெளியிட்டு இது போன்ற சீப் பப்ளிசிட்டி விளம்பரங்களை தேடிக் கொள்ள வேண்டாம் என பலரும் செல்வமணிக்கு சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருந்தும் இது தொடர்கிறது.
நலிவடைந்த மூத்த கலைஞர்களை கையேந்தவிட்டு அவமானப்படுத்த வேண்டாம் என்பதே நமது விருப்பமும்.
– கோடங்கி