விவசாயிகளுக்கு இலவசமாக உழவு செய்து தரும் திட்டம்
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசுடன் இணைந்து பிரபல டாஃபே (TAFE) டிராக்டர் நிறுவனம் விவசாய நிலங்களை இலவசமாக உழவு செய்து தரும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக இந்தப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஹெக்டேரில் வேளாண் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு தழுவிய ஊரடங்கால் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், வேளாண் பணிகளை மேற்கொள்ள மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கோடைஉழவுப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும், ஒன்றிரண்டு ஏக்கர் மட்டும் நிலம் வைத்திருக்கும்சிறு, குறு விவசாயிகளை கருத்தில் கொண்டு தமிழக வேளாண்மை மற்றும் வேளாண் பொறியியல் துறையுடன்சேர்ந்து டாஃபே நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக இந்நிறுவனம் “J FARM“ என்ற பெயரில் செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் மூலம் இந்த இலவச உழவு சேவையை விவசாயிகள் பெற முடியும். இந்த இலவச உழவு திட்டத்தின் கீழ் காரியாபட்டி அருகே உள்ள மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் 5 டிராக்டர்கள் மூலம் உழவுப் பணி தொடங்கப்பட்டது.
தமிழகம் முழுவதுமே இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது என்றும் உதவி தேவைப்படும் விவசாயிகள், டாஃபே நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் இத்திட்டத்தை அப்பகுதி விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துவைத்த தன்னார்வலரான கிருஷ்ணகுமார் என்பவர் கூறுகிறார்.
செல்போன் செயலி மட்டுமல்லாது 1800 4200 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் விவசாயிகள் இலவச உழவுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 30ம் தேதி வரை இச்சேவை வழங்கப்படும் என்றும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 500 ஏக்கர் உழவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலிலுள்ள இந்த நேரத்தில் உணவு உற்பத்தி குறைவதை தடுக்கும் வகையிலும் வேளாண் பணிகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்ற நோக்கிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு…
– ராஜா