சினிமா

விஷால் செல்வமணியின் ஆணவத்தால் தற்கொலையின் விளிம்பில் தொழிலாளர்கள்

தனபால் ஆவேசம்

சினிமா தொழிலாளர்கள் அவரவர் செய்யும் தொழில் முறையின் அடிப்படையில் தங்களுக்கென ஒரு அமைப்பை உருவாக்கி 23 சங்கங்களாகவும் ஒட்டுமொத்த சங்கங்களின் தலைமையகமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) செயல்பட்டு வருகிறது.


இந்த அமைப்பில் இருந்து டெக்னீசியன் சங்கத்தை சமீபத்தில் நீக்கினார் அதன் தற்போதைய தலைவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் செல்வமணி. இவரால் பாதிக்கப்பட்ட டெக்னீசியன் யூனியன் உறுப்பினர்கள் சுமார் 1200 பேர் தங்கள் வாழ்வாதாரம் இழந்து இன்று வறுமையில் வாடுகிறார்கள். இவர்களின் நிலை பற்றியும், டெக்னீசியன் யூனியனை சம்மேளத்திலிருந்து ஏன் நீக்கினார் செல்வமணி என்று பாதிக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் தனபாலிடம் நாம் கேட்ட போது,
“சினிமா தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், முதலாளிகளுக்கு சாதகமாகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் நடிகை ரோஜாவின் கணவர் செல்வமணியை நாங்கள் ஒருபோதும் தொழிற்சங்க தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஆரம்பத்திலேயே காட்டமாக பேச ஆரம்பித்தார். டெக்னீசியன்ஸ் சங்கத்தின் செயலாளர் தனபால்.
மேலும் அவர் கூறுகையில், ஆரம்பத்திலிருந்தே அதாவது 1996ம் ஆண்டு திரைப்பட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக படைப்பாளிகள் என்ற அமைப்பு உருவாக காரணமாக இருந்தவர்தான் இந்த செல்வமணி. அன்று செல்வமணி படுதோல்வி கண்டது அனைவரும் அறிந்த விஷயம்தான். 2011 – 2012 வருடத்திற்கான தொழிலாளர்களின் சம்பள பேச்சு வார்த்தை குறித்து தொழிலாளர்கள் நல ஆணையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த செல்வமணி தொழிலாளர்களுக்கு எதிராகவும், தயாரிப்பாளர்களுக்கு உறுதுணையாகவும், வரம்புமீறி பேசியதற்காக, தொழிலாளர்கள் நல ஆணையத்திலிருந்து வெளிநடப்பு செய்ததும் அனைவரும் அறிந்ததே.
ஆரம்ப காலத்திலிருந்தே தான் ஒரு தயாரிப்பாளர் என்ற ஆணவத்தோடு, தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வந்த செல்வமணி, தொழிலாளர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதித்துக் கொண்டு, அதற்கு வழி என்ன என்று ஆராய்ந்து தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரானால் மட்டுமே தன் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற எண்ணத்தோடு 2017 ஆம் ஆண்டு சம்மேளனத் தேர்தலில் தலைவருக்கு போட்டியிட குழு அமைப்பதற்கு முக்கிய நிர்வாகிகள் தேவை என்பதால், டெக்னீசியன் சங்கத்தின் செயலாளரான என்னை அவர் பக்கம் இழுத்து, சம்மேளனத்தின் தலைவராக முடிவு செய்தார். ஏற்கனவே தொழிலாளர்களுக்கு விரோதமாக அவர் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரி இனிமேல் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன். தொழிலாளர்களை காப்பாற்ற பாடுபடுவேன் என்று நடித்து என் மூலமாக ஒரு குழு அமைத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவரானார். (அப்போது அவர் தலைவரானது செல்லாது என்று நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு தற்போது செல்வமணிக்கு எதிராக தீர்ப்பு வரும் தருவாயில் இருப்பதாக கேள்விப்பட்டேன்)
அந்த சமயத்தில் டெக்னீசியன்ஸ் சங்க உறுப்பினர்களுக்கு பில்லாபாண்டி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் சம்பள பாக்கி சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டது. அதன்பின் தயாரிப்பாளர் தரப்பு பணம் செட்டில் பண்ணியதால் பிரச்சனையை முடித்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பு பணியை தொடர்ந்தார்கள் எங்கள் சங்க உறுப்பினர்கள்.
இந்தப் பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு அதே சமயத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷாலின் சொந்த கம்பெனி V.F.F புரொடக்ஷன் மூலமாக தயாரிக்கப்பட்டு வந்த துப்பறிவாளன், இரும்புத்திரை என்ற திரைப்படங்களின் மூலமாக தொழிலாளர்களுக்கு 13,00,000 (பதிமூன்று லட்சம்) சம்பளத்தை இரண்டு மாதகாலமாக கொடுக்காமல் இழுத்தடித்தார்கள். அதனால் சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் நான் விஷால் தரப்பில் கேட்டபோது, மேலும் சிலமாதங்கள் கழித்துத்தான் பணம் தரமுடியும் என்று கூறியதால், தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு கூட பணம் இல்லாததால் அவர்கள் வேலைக்குச் செல்ல மறுத்ததால், விஷாலும், செல்வமணியும் கூட்டு சேர்ந்து கொண்டு எங்கள் சங்கத்தை ஒழிக்க வேண்டும் என்று விஷால் கூறியதை மனதில் வைத்துக் கொண்டு பில்லாபாண்டி என்ற படத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சனையை சம்பந்தப்படுத்தி எங்கள் சங்கத்தை 7.9.2017 அன்று முன் அறிவிப்பு இன்றி சம்மேளனத்தில் இருந்து நீக்கி வைத்தார் செல்வமணி. அதன்பின் எங்கள சங்கத்தை பெப்சியில் இணைக்ககோரி தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் முறையிட்டோம். அதன்பின் தொழிலாளர் நல ஆணையத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் எங்கள் சங்கத்தை பெப்சியில் இணைக்க வேண்டும். எங்கள் உறுப்பினர்களுக்கு நடைமுறை சம்பளத்தை திரும்ப பெற்றுத் தரவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு அதற்கு முன் பெப்சியின் பொதுக்குழுவை கூட்டி, அக்கூட்டத்தின் வாயிலாக இரண்டு தீர்மானங்களையும் நிறைவேற்றி தருவதாக ஒப்புதல் அளித்துவிட்டு இன்று வரை அதை நிறைவேற்றாமல் எங்கள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை சாவின் விளிம்புக்கு தள்ளிய விஷால், செல்வமணி இருவரின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் தொழிலாளர்கள் நல ஆணையத்திற்குச் சென்று முறையிட்டோம். அவர்கள் கூறிய ஆலோசனையின் படி நீதிமன்றத்திற்குச் சென்று முறையிடுவது என்று முடிவு செய்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறோம்.
இந்நிலையில் விஷாலும், செல்வமணியும் கூட்டு சேர்ந்து கொண்டு தங்களுடைய பணபலத்தையும், ஆள்பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி பல கோணங்களில் வழக்கிற்கு இடையூறு செய்கிறார்கள். மேலும் எங்கள் சங்கத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களையும், சங்கத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சங்கத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டவர்களையும் இணைத்துக் கொண்டு எங்களுக்கு எதிராக புதிதாக ஒரு சங்கம் உருவாக்கி அதற்கு விஷால் செயலாளராக கையொப்பமிட்டு அடையாள அட்டை வழங்கி படப்பிடிப்பை நடத்த மேனேஜர்கள் மற்றும் அவுட்டோர் யூனிட் நிறுவனத்தார் மூலமாக மிரட்டுவதால் வேறு வழியில்லாமல் தங்களது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு எங்களது சங்க உறுப்பினர்கள் ஒரு சிலர் விஷால் கையெழுத்திட்ட அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பில் வேலை செய்கிறார்கள். விஷாலின் கார்டு பெறாதவர்களுக்கு வேலை இல்லை. இதனால் 800 தொழிலாளர்களுக்கு மேல் வேலை இல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கி தற்கொலையின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் விஷாலும் செல்வமணியும் இணைந்து ஆந்திராவில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து தமிழ் திரையுலகை நம்பி இருக்கும் எங்கள் உறுப்பினர்களுக்கு எதிராக படப்பிடிப்பை நடத்துகிறார்கள். தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கும் விஷால் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளதை நினைக்கும்போது காமெடியாக உள்ளது. சினிமாத்துறையில் உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியாத விஷால் தமிழக மக்களை எப்படி காப்பாற்றுவார். நியாயங்களை தட்டிக் கேட்டால், சங்கமே இருக்கக் கூடாது, சங்க உறுப்பினர்கள் வாழக்கூடாது என்று நிஜவாழ்க்கையில் கொடூரமான வில்லனாக நடந்து கொண்டு சினிமாவில் கதாநாயகனாக நடித்து தமிழக மக்களை ஏமாற்றி வரும் விஷாலும், இவரோடு கூட்டு சேர்ந்து எப்போதும் தமிழ், தமிழ் என மேடைக்கு மேடை முழங்கி தன்னை தமிழின போராளி என காட்டிக் கொண்டு தற்போது ஆந்திராவில் குடியேறி தமிழக மக்களையும், பெப்சியில் உள்ள அனைத்து சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையம், மொத்தத்தில் தமிழ் திரையுலகையே அழித்துக் கொண்டு நடமாடும் செல்வமணி ஆகிய இருவரும் செய்துவரும் துரோகங்களுக்கு எங்களது சங்கத்தின் மூலமாகவே விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என பேசி முடித்தார்.
எது எப்படியோ சினிமாத்துறைக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் நல்லது நடந்தால் சரி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button