சொத்துக் குவிப்பு வழக்கு : ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு சிக்கல்..?
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்து குவிப்பு புகார் தொடர்பான வழக்கில் முதற்கட்ட விசாரணை நிறைவடைந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில் முந்தைய விசாரணையின் போது, புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ராஜேந்திரபாலாஜி 1996-ல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவரது வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் சார்பில் விசாரணை குறித்த 6-ஆவது அறிக்கை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளதாகவும், அமைச்சரிடமும் விசாரிக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணை அறிக்கை மாநில கண்காணிப்பு கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜேந்திர பாலாஜின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வரலாம் என்கிறார்கள்.
இந்நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “அ.தி.மு.க மனிதர் ஆரம்பித்த கட்சி இல்லை. புனிதர் ஆரம்பித்த கட்சி. சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க 13 சீட்டுகளை வென்றது. 13 என்றாலே பேய் நம்பர். அ.தி.மு.க பெற்ற 9 சீட்டுகளும் நவரத்தினங்கள்.
ஔரங்கசீப் போல் உடன்பிறந்த அண்ணனையே காட்டிக் கொடுத்துவிட்டு இன்றைக்கு தி.மு.கவின் தலைவராக சூழ்ச்சி செய்து வந்தவர்தான் ஸ்டாலின். தயாநிதி மாறன், கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் என சீமான்களின் கையில் திமுக மாட்டிக்கொண்டது.
கோபாலபுரத்தில் உள்ள பெருமாள் மற்றும் பிள்ளையார் கோவிலைத் தவிர மற்ற எல்லாவற்றையும் எழுதி வாங்கி விட்டார்கள். கர்நாடகத்தைப் போல் ஆட்சியைக் கலைக்க இங்கு என்ன குமாரசாமி ஆட்சியா நடக்கிறது? அப்படி ஏதாவது செய்தால் சும்மா பந்து மாதிரி தூக்கி போட்டு மிதித்திடுவோம்.
திமுக மட்டும் தான் ரவுடி கட்சியா? நாங்களும் எல்லாத்தையும் பார்த்துட்டுதான் வந்திருக்கோம். எந்த வேலையும் செய்வோம். எடப்பாடி கண் அசைத்தால், கை காட்டினால் திமுகவிற்கு சாவு மணி அடித்துவிடுவோம். அதிமுகவில் இருப்பவர்களின் ஒவ்வொரு பின்னாலும் ஒரு வீர வரலாறு இருக்கிறது. அதிமுகவில் எல்லாரும் தளபதிகள் தான்’’ என்று ஆவேசமாக பேசினார்.