கொரோனா அச்சம்… : படப்பிடிப்புகள் ரத்து..!
உலகையே நடுங்க வைத்திருக்கும் கொரோனாவின் கோரப்பிடிக்கு பயந்து கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படக்குழுவினர் வெளி நாடுகளில் படப்பிடிப்பை கைவிட்டு தாயகம் திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் வருகிற அனைத்தும் கடந்த 19ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.
கொரோனாவின் கோரப்பிடி நாளுக்கு நாள் உலகின் பல நாடுகளையும் பதற வைத்துக் கொண்டு இருக்கின்றது. சென்னையில் பெரும்பாலான மால்கல்கள் மற்றும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. சில திரையரங்குகளில் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் ஒரு பாட்டு என்றாலும்வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தினால் தான் பிரமாண்டம் தெரியும்என்று வெளிநாட்டிற்கு செல்லும் நம்ம ஊரு சினிமாபடப்பிடிப்பு குழுவினர் வெளிநாட்டு பயணத்தை முழுவதுமாக தவிர்த்தனர்.அந்தவகையில் சீனா செல்ல திட்டமிட்டிருந்தஇந்தியன் 2 குழுவினரோ தங்கள் படப்பிடிப்பு இந்தியாவிலாவதுநடக்குமா ? என்ற நிலையில் உள்ளனர்.
பொன்னியின் செல்வனுக்கு தாய்லாந்து சென்ற மணிரத்னம் அண்ட் கோ, அங்கிருந்து தாயகம் திரும்பி படத்தை எங்கு படமாக்குவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். லண்டனில் துப்பறிய புறப்பட்ட விஷால் மிஷ்கின் குழாயடி சண்டை போட்டுக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக ஊருக்கு திரும்பி வந்தனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக 5 மாறுபட்ட வேடத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் ரஷ்யாவில் நடந்து வந்தது. கொரோனாவின் தாக்குதலுக்கு அஞ்சி கோப்ரா குழுவினரும் படப்பிடிப்பை பாதியில் கைவிட்டு தாயகம் திரும்பி உள்ளனர்.
வழக்கமாக சென்னையில் கோகுலம் ஸ்டுடியோ, ஈவிபி பிலிம் சிட்டி. ஆந்திராவில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வந்த படங்கள் கூட கொரோனா பீதியில் குறிப்பிட்ட நபர்களை வைத்து படப்பிடிப்பு நடத்தப்படுவதாக கூறப்பட்டது.
ஏற்கனவே திரையரங்குகளுக்கு கூட்டம் வராத காரணத்தால் ஒரு சில வாரங்களில் வெளியாக உள்ள விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரை போற்று ஆகிய படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார், கொரோனா வைரஸ் அச்சம் நீங்கும் வரை படப்பிடிப்புகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து பெப்சி சார்பில் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி நிர்வாகிகள் கடந்த 19 ந்தேதி முதல் சீரியல் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
ஏற்கனவே வினியோகஸ்தர்கள் சங்கத்தினர், திரையரங்குகள் ஸ்டிரைக்கிற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் கொரோனா அச்சம் திரை உலகினரையும் உலுக்கியது..!
கொரோனா அச்சம் காரணமாக உலக தலைவர்களே கைகுலுக்கும் நடைமுறையை கைவிட்டுள்ள நிலையில் ரசிகர்களையும், நாயகர்களையும் பார்த்ததும் பாசத்தால் கட்டிப்பிடித்து முத்தமிடும் பாசக்கார மனிதரான விஜய் சேதுபதியிடம் அதனை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேசதலைவர்கள் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தஒருவருக்கொருவர் கைகுலுக்கும் நடைமுறையை கைவிட்டு தமிழ் பாரம்பரிய முறைப்படிகையெடுத்து கும்பிட்டு வணங்கி வருகின்றனர். இந்தநிலையில் தமிழ் நடிகர்களில் மனிதநேயம்கொண்டவராக புகழப்படும் விஜய் சேதுபதி தன்னுடையமுத்தபழக்கத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
தன்னை சந்திக்கும் ரசிகர்களையும், நாயகர்களையும் எந்த ஒரு பேதமுமின்றி அன்பை வெளிக்காட்ட அவர்களை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிடுவது விஜய் சேதுபதியின் வழக்கம்..! அந்தவகையில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்க்கு முத்தமிட்டு அவர் பதிவிட்ட டுவிட்டர் போட்டோ “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், கொரோனா அச்சம் காரணமாகவே ரசிகர்களை அழைக்க இயலவில்லை என்று கூறியதோடு, மக்கள் அதிகமாக கூடினால் கொரோனா பரவும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஆனால் அதே விழாவில் விஜய்யை கட்டிப்பிடித்து விஜய்சேதுபதி முத்தம் கொடுக்க, பதிலுக்கு விஜய்யும் முத்தமிட்டு அன்பை வெளிக்காட்டிய போது அங்கு கொரோனா விழிப்புணர்வு மிஸ்சானது..!
கொரோனா பரவும் என கருதி கைகுலுக்குவதையே தவிர்த்து வணக்கம் செலுத்தி வரும் நிலையில் பாசத்தை வெளிப்படுத்துவதாக நினைத்து முத்தமிடுவதால், அதிவேகத்தில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .
அதிலும் முத்தமிடுவதை வழக்கமாக செய்துவரும் விஜய் சேதுபதி போன்ற பாசக்கார மனிதர்கள், சில நாட்களுக்கு, முத்தமழை பொழிவதை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கொரோனாவுக்கு விஜய்யோ, விஜய் சேதுபதியோ தெரியாது… கொரோனா வந்தால் சிக்கல் தானே ? என்று சுட்டிக்காட்டும் மருத்துவர்கள் வரும் முன்காப்பதே அனைவருக்கும் நலம் என்றும் இந்த விழிப்புணர்வை பிரபலங்கள் தான் முன்னின்று மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்கின்றனர்.
– குண்டூசி