தமிழகத்தில்தான் இந்தி கற்பவர்கள் அதிகம் : ஹிந்தி பிரசார சபா
தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் எழுந்துள்ள நிலையில், இந்தி கற்கும் ஆர்வம் அதிகமாகியுள்ளது.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவில் இந்தி மொழியை மூன்றாவது மொழியாக கற்பிப்பது தொடர்பாக குறிப்பிட்டது சரச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் என பல மாநிலங்களில் மத்திய அரசு இந்தியைத் திணிப்பதாக எதிர்ப்புக் குரல் எழுப்பின. இதன் எதிரொலியாக, மத்திய அரசு இந்தி கற்பது கட்டாயமில்லை என்று மாற்றியது.
இந்நிலையில் தக்ஷிண பாரத் ஹிந்தி பிரசார சபா தாமாக முன்வந்து இந்தி படிக்கும் இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
1918ஆம் ஆண்டு தென் இந்தியாவில் இந்தியை பரப்புவதற்காக தொடங்கப்பட்ட அமைப்பு தக்ஷிண பாரத் ஹிந்தி பிரசார சபா. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை 2009-&2010ல் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்ட பின் தமிழகத்தில் இந்தி கற்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன், 2009ல் வெறும் 98 பள்ளிகளில் மட்டும் இந்தி கற்பிக்கப்பட்டது. இது 2015ல் 580ஆகவும் 2018ல் 929ஆகவும் அதிகமாகியுள்ளது என அந்த அமைப்பு கூறுகிறது.
இந்த காலக்கட்டத்தில் ஹிந்தி பிரசார சபா நடத்தும் தேர்வில் பங்கேற்போர் எண்ணிக்கையும் 2 லட்சத்திலிருந்து 5.7 லட்சமாகக் கூடியுள்ளது. சென்னையில் அதிகமானவர்கள் இந்தி படிக்க ஆர்வம் காட்டுகின்றனர் என சபாவின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜ் கூறுகிறார்.
“ஆண்டுதோறும் ஜூலை மற்றும் பிப்ரவரியில் இந்தி படிப்போருக்கான முதல் தேர்வு நடத்தப்படும். ஜூலையில் 30,000க்கு அதிகமானவர்களும் பிப்ரவரியில் சுமார் 10,000 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். குறிப்பாக இந்தி படிப்பவர்களில் 80% பேர் மாணவர்கள்.” என ஹிந்தி பிரசார சபா தெரிவிக்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமானவர்கள் இந்தி கற்பதாகவும் கூறியுள்ளது.