சூப்பர் ஸ்டார்களை வீழ்த்திய பிரபல இயக்குனர்…
தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய காரணம், சினிமா. ஆனால், இன்றைய சூழலில் அழிப்பதும் சினிமா தான். தமிழ் சினிமா என்றாலே கதாநாயகன் தான் எல்லாமே. ஆனால், அந்த காலத்தில் இருந்தே சில இயக்குனர்கள் மட்டும், தனது கதையை மய்யப்படுத்தி வெற்றி பெற்று வருகின்றனர். கதாநாயகனை உருவாக்குவதும், அழிப்பதும் இவர்கள் தான். தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக பிறமொழி பேசும், தமிழ் தெரியாத பெண்களை பிரபலமாகும் சில இயக்குனர்கள், தமிழ் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இதில் வித்தியாசமானவரும், பல பிரபலங்களை கோடிகளில் புரள வைத்தவரும், சிலரை தெருக்கோடியில் நிறுத்தியவருமான, இயக்குனர் முருகதாஸ் பற்றி வெளிவராத பல தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.
முருகதாஸ் ஒரு தமிழன். தமிழ் மொழி சிறக்க பாடுபடும் சிறந்த இயக்குநர். நடிகர் அஜித்தை வைத்து தீனா என்ற படம் மூலம் அறிமுகமான இயக்குனர். சீனா போற்றும், வணங்கும் தமிழரான போதிதருமரை, இளைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்டியவர் முருகதாஸ் என்றால் மிகையாகாது. இதில் நடிகர் சூர்யாவை ஒரு படி உயர்த்தி கஜினி மற்றும் ஏழாம் அறிவு ஆகிய படங்களின் மூலம் உலகறியச் செய்தவர் முருகதாஸ்.
அதன் பிறகு இவரது இயக்கத்தில் முக்கியமான படம் விஜயகாந்த் நடித்த ரமணா. விஜயகாந்த்க்கு அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத படம் ரமணா தான் என்றால் மிகையாகாது. அதன் பின்னர் எஸ்.ஜெ.சூர்யா மூலம் நடிகர் விஜய்யுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.
விஜய்காக மூன்று படங்களை இயக்கினார். துப்பாக்கி படத்தின் மூலம் விஜய்க்கு தனி அந்தஸ்தை உருவாக்கினார். வசூல் மழையால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என கொள்ளை லாபம் அடைந்தனர்.
தேசத்தை காக்கும் இராணுவ வீரனாக நடித்து, ஸ்லீப்பர்செல் என்ற தேசவிரோத கும்பல் ஒன்றை களையெடுக்கும் சூப்பர் ஸ்டாராக உருவானார் விஜய். துப்பாக்கி என்ற ஆயுதம் தந்த முருகதாஸ், அடுத்த ஆயுதமாக கத்தி என்ற ஆயுதத்தை விஜய்க்கு வழங்கினார். துப்பாக்கி’ படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, முருகதாஸ் விஜய் கூட்டணில் வந்த படமென்பதால்,
கத்தி’ மீது எதிர்பார்ப்புகள் இருந்தன. படத்தின் விவசாயத்திற்காகவும், தண்ணீருக்காகவும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு விவசாயிகள் கழுத்தை அறுத்துக்கொள்ளும்போது, மொத்தத் திரையரங்கிலும் மயான அமைதி ஏற்படுத்தியவர் முருகதாஸ். சிலர் தேம்பியழுதார்கள். விவசாயம் நம் ரத்தத்தோடு ஊறிய ஒன்று. ஏதோவொரு வகையில் நம்முடன் பிணைந்திருப்பது விவசாயம். நாளுக்கு நாள் அது அழிந்துவரும் நிலையில், இதுபோன்ற ஒரு கதை மூலம் விஜய்க்கு அரசியல் நாற்காலி போட்டு தந்தவர் முருகதாஸ்.
விஜய்க்கு அதிரடி படம் என்றால் அது கில்லி தான். அது தெலுங்கில் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்க, ஒக்கடு என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் ஆன படம் தான், தமிழில் விஜய் நடித்த கில்லி.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு தமிழ் நன்றாக தெரியும். தமிழ் சினிமாவிலும் சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று மகேஷ்பாபுவிற்கு மிகப்பெரிய ஆசை இருந்தது. பல முன்னணி இயக்குநர்களிடம் தமிழில் மாஸான கதையை கேட்டுவந்தார். மகேஷ்பாபுவின் தமிழ் ரீமேக் படங்கள் பல 2016 வரை தமிழகத்தில் சக்கைப்பேடு போட்டன என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு நிகரான நடிகராக பலரால் பேசப்பட்டார் மகேஷ்பாபு. இதை அறிந்த முருகதாஸ், திரையுலகினர் யாரும் செய்யாத செயலில் ஈடுபட்டார். தமிழ் நடிகர் விஜய்க்கு போட்டியாக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வருவதை முருகதாஸ் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வீழ்த்த முடிவு செய்தார். ‘ஸ்பைடர்’ என்ற தலைப்பில் ஒரு கதையை மகேஷ்பாபுவிற்கு கூறி, தனது வலையில் வீழ்த்தினார் முருகதாஸ். விஜய் போல பிரபலமாக்குவதாக நம்பவைத்தார். அதில், மயங்கினார் மகேஷ்பாபு.
ஒரு சாதாரண கதையை ஸ்பைடர் என்ற பெயரில், பிரமாண்டமான முறையில் எடுத்து, மண்ணை கவ்வ செய்தார் முருகதாஸ். மகேஷ்பாபுவின் தமிழ் சூப்பர் ஸ்டார் கனவு தகர்ந்தது. இந்த படத்தால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது.
அதன் பிறகு, விஜய்க்கு, அரசியல் கதையை தயார் செய்தார், முருகதாஸ். அதற்கு சர்கார் என்று பெயர் வைத்தார். ஓட்டு அரசியலை மையப்படுத்தி சர்கார் படம் வெளியானது. குறிப்பாக, ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஓட்டாக போட்டால், 49 பி என்ற தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற முக்கிய கருத்தை சொல்லியிருந்தார். இந்த படம் அரசியல் ரீதியாக களைகட்டியது. பல எதிர்ப்புகளையும் சந்தித்தது. இந்த படம் மூலம் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விஜய்யை மாற்றினார், முருகதாஸ்.
இதற்கு அடுத்ததாக, தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியை வீழ்த்துகிற பணியில் ஈடுபட்டார். ரஜினி தமிழர் அல்ல என்பதும், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத இமயம் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. ரஜினிகாந்த்தை வீழ்த்தினால் மட்டுமே, சூப்பர் ஸ்டார் என்ற அந்த இடத்தை விஜய் அடைய முடியும். ரஜினியை வீழ்த்த நேரம் பார்த்து காத்திருந்தார். ரஜினிக்கும் கதை சொன்னார் முருகதாஸ். ரசித்தார் ரஜினி. மனதுக்குள் சிரித்தார், முருகதாஸ்.
ரஜினிகாந்த், தனது அரசியல் வருகையை உறுதி செய்துவிட்டார். ‘தனிக் கட்சி தொடங்குவேன். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவேன்’ என்பது வரை திட்டவட்டமாக அறிவித்து இருந்தார். தேர்தல் நெருங்குகிற வேளையில் கட்சியை அறிவித்து, அதே வேகத்தில் தேர்தலை எதிர்கொள்வதே அவரது வியூகம்! அதற்காகவே கட்சி பெயர் அறிவிப்பை தள்ளிப் போட்டு வந்தார்.
ரஜினிகாந்துக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கபாலி’ படம்தான் பஞ்ச் டயலாக்களுடன் பட்டையைக் கிளப்பியது. பழைய ‘பாட்ஷா’ மாதிரி மீண்டும் ஒரு ஆக்ஷன் த்ரில்லரை கொடுத்துவிட்டு அரசியலுக்குள் இறங்கினால் அது இமேஜை இன்னும் தூக்கி நிறுத்துவதாக அமையும் என நினைத்தார், ரஜினி. ஆனால் இப்போது ஆக்ஷன் த்ரில்லர்களை வெற்றிகரமாக கொடுக்கும் இயக்குனர்கள் அதிகம் இல்லை. அஜித், விஜயகாந்த், சூர்யா மற்றும் விஜய்க்கு மாஸ் படங்களை இயக்கிய முருகதாஸை நம்பி களத்தில் இறங்கினார், ரஜினிகாந்த். இதன் காரணமாக தர்பார் என்ற படத்தை இயக்கினார் முருகதாஸ். லைக்கா என்ற பிரமாண்டமான இலங்கை நிறுவனம் தயாரித்தது. ரஜினிகாந்த்க்கு 100 கோடிக்கு மேல் சம்பளம். 200 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் தர்பார். உப்பு சப்பு இல்லாத கதையில் படம் வெளியானது.
பெருத்த தோல்வியை சந்தித்தார் ரஜினி. வெற்றி பெற்றார் முருகதாஸ். மாஸ் படங்களின் ஸ்பெஷலிஸ்ட் இயக்குநரும், மாஸுக்கான மொத்த உருவமும் கொண்ட ரஜினியும் இணைந்த படம், புஸ்வானம் ஆனது. ரஜினி என்ற மந்திர சொல், செல்லாக்காசு ஆனது. படம் போன்டியானது. விநியோகஸ்தர்கள் பலர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் லாபம் காண்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான். 100 கோடி சம்பளத்தை 50 கோடி என்று பேரம் பேசிய சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தமிழர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரஜினி என்ற மாமனிதரை, பாதி மணி ஆக்கிய பெருமை முருகதாஸை மட்டுமே சாரும்.
அண்ணாத்த வரலாம், அந்த நாள் வராது. தமிழ் சினிமாவை தமிழன் ஆளவேண்டும் என்ற முருகதாஸ் திட்டம் வெற்றி பெற்றது. நாடே கொந்தளிக்கும் குடியுரிமை பிரச்சனையில், தலையிடாமல் செய்ததும் தர்பார் வீழ்ச்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. முருகதாஸின் அடுத்த படம் விஜய் என்ற தமிழனை அரசியல் அரியணையில் அமர்த்தி அழகு பார்க்கும் படமாக இருந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.
- ராபர்ட் ராஜ்