பல்லடத்தில் வாடகை கார்களாக மாறி வரும் சொந்த கார்கள் -: சாட்டைய சுழற்றுமா வட்டார போக்குவரத்து துறை..
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி மட்டுமின்றி கோழிப்பண்ணை, விவசாயம், பனியன் தொழில் அதிக அளவு நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் வாடகை வாகனங்களின் பயன்பாடு அதிக அளவில் தேவைப்படுகிறது. பல்லடம் பேருந்து நிலையத்தை சுற்றி வாடகை கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நூற்றுக்கணக்கான வாடகை கார்கள் இருந்த நிலையில் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் வாடகை பயன்பாட்டில் ஈடுபட்டது தான். வாடகை கார்களுக்கான காப்பீடு, பெர்மிட் உள்ளிட்டவைகளுக்கு அதிக அளவில் செலவு செய்யவேண்டும். ஆனால் சொந்த வாகனங்களுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை.
மேலும் விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருபவர்கள் எக்ஸ்ட்ராவாக நான்கு ஐந்து சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவதால் விதிமுறை மீறி சம்பாதிப்பதோடு வாடகை கார்களின் தொழிலுக்கு வேட்டு வைத்து விடுகின்றனர்.
இதனிடையே வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விதிமீறி இயக்கப்படும் சொந்த வாகனங்களை பறிமுதல் செய்து பதிவெண்ணை ரத்து செய்வதோடு அதிக அபராதத்தை விதிக்க வேண்டும் என்பதே வாடகை கார் உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.