சென்னையில் மர்மப்பொருள் வெடித்ததில், பள்ளி மாணவன் உடல் சிதறி பலி ! வீடுகள் சேதம்
கொளத்தூர் ஜி.கே.எம் காலனி முருகன் நகர் 38வது தெருவில் வசிப்பவர் ஹரிஹரன். இவர் தனது வீட்டிலேயே கார் மற்றும் யூஎஸ்பி பேட்டரிகளை சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். அவரது மகன் 17 வயதுடைய ஆதித்யா பிரணவ், இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். வியாழக்கிழமை சுமார் 3 மணி அளவில் தனது வீட்டுப் பாடங்களை படித்த பிறகு, அறிவியல் சம்பந்தப்பட்ட ரசாயன கெமிக்கல் கொண்டு பரிசோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது போல் அவரது வீட்டில் உள்ள பொருட்கள் வெடித்து சிதறியதோடு, மேற்கூறையும் சேர்ந்து விழுந்து அருகில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட வீட்டின் வெளியே நின்று அப்பகுதியினர் பார்த்த போது, சிறுவனின் உடல், கை, கால்கள் கொடூரமான முறையில் சிதறி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில், கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் இடத்திற்கு வந்த கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாண்டியராஜன் மற்றும் கொளத்தூர் சரக உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு உடல் சிதறி இறந்த பள்ளி மாணவன் ஆதித்யா பிரணவ்வின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் கொளத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து இடர்பாடுகளை அகற்றியதோடு இந்த விபத்தில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என நீண்டநேரம் தேடியும், சிறுவனைத் தவிர யாரும் விபத்தில் சிக்கவில்லை என உறுதி செய்துள்ளனர்.
மேலும் பள்ளியில் தரப்பட்ட ப்ராஜெக்ட் விஷயமாக செய்முறை விளக்கத்தினை செய்து கொண்டிருந்தபோது அதிலிருந்து கெமிக்கல் சிதறி சிலிண்டரின் மேல் உரசி தீப்பற்றி வெடித்து சிதறி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், தடையவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன், ஆதாரங்கள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகளுக்குப் பிறகுதான் சிறுவன் பயண்படுத்திய கெமிக்கல் எந்த வகையைச் சார்ந்தது, அதில் ரசாயனம் கலந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதா ? அல்லது மர்ம பொருள் ஏதும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தார்களா ? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் இறந்த சிறுவனின் தகப்பனார் ஹரிஹரன் காவல் நிலையத்தில் இருந்தபடியே மகன் இறந்தது கூடத் தெரியாமல் தனது மகனை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி அழுது புலம்பியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கே.எம்.எஸ்