தமிழகம்

பணி நிரந்தரம் விடியலுக்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்

தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மொத்தம் 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பல்வேறு காரணங்களினால் தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு தற்போது ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.

குறைவான ஊதியம் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே விதிமுறையை திருத்தி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இல்லையெனில் சிறப்பாசிரியர்கள் நிலையில் பணியமர்த்தி புதிய அரசாணையை அமுல் செய்யவேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில் தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியதாவது:

“கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் 181வது உறுதிமொழியாக பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என குறிப்பிட்டிருந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 300க்கும் மேல் நிறைவேற்றி சாதனை புரிந்து உள்ளார்.

ஆனால், 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரமான 181 உறுதிமொழி வாய்மொழி அறிவிப்பாகவே உள்ளதால், இலவு காத்த கிளியாக தவித்து வருகிறார்கள். எனினும், தொடர்ந்து எங்களது கோரிக்கையை வலிறுத்தி வருகிறோம்.

அந்த வகையில் தமிழக முதல்வர், அரசு நிகழ்ச்சிகளுக்காக கடலூர், விழுப்புரம், திருவாரூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, மதுரை, திருப்பூர், திருவள்ளூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வந்தபோது பகுதி நேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் தொடர்பாக கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.

இதுபோல் பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் சென்னை பள்ளிக்கல்வி வளாகத்தில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி நடந்த கலந்தாலோசனைக் கூட்டத்திலும் பணிநிரந்தரம் தொடர்பாக வலியுறுத்தியதுடன் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கல்வி அமைச்சரிடம் நேரில் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி வருகிறோம்.

அதுபோல் தஞ்சாவூர், தருமபுரி, திருவாரூர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற மக்களை தேடி முதல்வர் என்ற சிறப்பு குறை தீர்க்கும் நிகழ்ச்சிகளிலும் பணிநிரந்தரம் தொடர்பான கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.

அரசு கொறடா மற்றும் அனைத்து அமைச்சர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வருகிறோம். தபால் மற்றும் ஈமெயில் மூலமாக கோரிக்கை மனு அனுப்பி வலியுறுத்தி வருகிறோம். சமூக வலைத்தளங்கள், ட்விட்டர், பேஸ்புக் மூலமும் பணிநிரந்தரம் கோரிக்கை அனுப்புகிறோம்.

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத்தோடரில் கொமதேக பொதுச்செயலாளர் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன், பாமக தலைவர் பெண்ணாகரம் எம்எல்ஏ கோ.க.மணி ஆகியோர் பணிநிரந்தரம் கேட்டு பேசி கோரிக்கை வைத்து உள்ளனர். மேலும், இம்மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுக ஒரத்தநாடு எம்எல்ஏ ரெ.வைத்திலிங்கம் பணி நிரந்தரம் குறித்து பேசினார்.

அப்போது பதில் தெரிவித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேர்தல் அறிக்கைபடி செய்வோம் என்றார். தற்போது 12 ஆயிரம் பேருக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் கொடுக்க அரசுக்கு ரூ.13 கோடி செலவு பிடிக்கிறது.

இதை இடைநிலை ஆசிரியர் நிலையில் பணியமர்த்த மாதம் ஒன்றுக்கு மேலும் ரூ.20 கோடி செலவிட நேரும். இதை இந்த வேலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் விதவைகள், ஏழைகள் நிலை உயர அரசு மனிதாபிமானத்தோடு செய்ய வேண்டுகிறோம்.

அதேவேளையில் பட்ஜெட் மானிய கோரிக்கையில் கதர் கைத்தறி துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தோரை நிரந்தரம் செய்ய அறிவிக்கப்பட்டது.
வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்கள் நிரந்தரம் என்று அறிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையில் சிவாச்சாரியர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் நிரந்தரம் என அறிவிக்கப்பட்டது. முதல்வர் பதவி ஏற்கும் முன்பே கடந்த ஆண்டு மே 3ம் தேதி அன்று சுகாதாரத்துறையில் 1,212 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, பகுதிநேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் ” என்றார்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button