அரசியல்

பரோலில் வரும் சசிகலா… : ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய சசிகலா சகோதரர் திவாகரன்…

நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் என சசிகலாவின் சகோதரரும் அண்ணா திராவிடர் கழகத் தலைவருமான திவாகரன் பேசியுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அடுத்தடுத்து அரங்கேறிய பல்வேறு திருப்பங்களுக்கு பின்னர், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரும் ஓரங்கட்டப்பட்டு, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தலைமையில் அக்கட்சி ஒருங்கிணைந்தது.

இதையடுத்து, தனிக்கட்சி தொடங்கிய டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, மன்னார்குடியில் அம்மா அணி செயல்படுவதாக கூறி அதற்கான அலுவலகத்தை சசிகலா படத்துடன் அவரது சகோதரர் திவாகரன் திறந்தார். ஆனால், தன்னை உடன் பிறந்த சகோதரி என அழைக்கக்கூடாது, தனது பெயரை பயன்படுத்த கூடாது என வழக்கறிஞர் மூலம் சசிகலா நோட்டீஸ் அனுப்பினார்.

இதனைத்தொடர்ந்து, அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கிய திவாகரன், அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், திமுகவின் தஞ்சாவூர் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்லத்திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு நடத்தி வைத்த இந்த திருமணத்தில், சசிகலாவின் சகோதரரும் அண்ணா திராவிடர் கழகத் தலைவருமான திவாகரன் கலந்து கொண்டார்.
திமுக தலைவர் ஸ்டாலினுடன், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய திவாகரன், தமிழ்நாட்டின் நிலை இன்று மிக கேவலமாக உள்ளது. தமிழர்கள் இரண்டாம் தர நிலையில் நடத்தப்படுகிறோம். கன்னடத்திலிருந்து வந்த ஒருவர், பெரியாரை பேசும் அளவிற்கு இன்று துணிச்சல் வந்துள்ளது என ரஜினையை மறைமுகமாக சாடினார்.

“திராவிட தலைவர்கள் ஒருவர், ஒருவராக மறைந்ததால் இந்த நிலை வருகிறது. தமிழ், தமிழகம் தான் நமக்கு முதல் முக்கியம். அதை காப்பவர்களுக்கு பின் நாம் நிற்க வேண்டும். தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதை காக்கும் ஒரே சக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்” என திவாகரன் புகழாரம் சூடினார்.

அரசியலில் நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். சிலருக்கு இடைஞ்சல் செய்வதற்காகவே அசியலுக்கு வந்தேன் என தனது அரசியல் வருகை குறித்து விளக்கம் அளித்த திவாகரன், 85 சதவீதம் திமுகவின் வெற்றியே உள்ளாட்சி தேர்தலில் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியால் தட்டி பறிக்கப்பட்டிருக்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா மார்ச் மாதம் பரோலில் சிறையில் இருந்து வெளியே வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் இவர்கள் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி குன்ஹா வழங்கிய நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். ஆனால், அதற்கு முன்னதாகவே ஜெயலலிதா காலமானதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர். அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர்.

சுமார் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ள சசிகலாவுக்கு இன்னும் ஓராண்டு தண்டனை மீதம் உள்ளது. இதனிடையே, நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என கர்நாடக சிறைத்துறை இயக்குநர் என்.எஸ்.மெகரிக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா மார்ச் மாதம் பரோலில் சிறையில் இருந்து வெளியே வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்திற்கும், சசிகலாவின் அக்கா வனிதா மணியின் பேத்தியான பாஸ்கரனின் மகளுக்கும் வருகிற மார்ச் மாதம் 5ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும் என விரும்பும் மன்னார்குடி உறவினர்கள் அவரை நேரில் சந்தித்தும் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களின் அழைப்பை ஏற்று பரோலில் வெளியே வருவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு தனது வழக்கறிஞர்களிடம் சசிகலா அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சசிகலாவுக்கு பரோல் கேட்டு அடுத்த வாரத்தில் விண்ணப்பம் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும், அவர் உயிரிழந்த போதும் சசிகலா பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • உதுமான் அலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button