மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆசிரியர்கள் : நடவடிக்கை எடுக்குமா பள்ளிக்கல்வித்துறை ?
கடந்த காலங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்த மாவட்டம் விருதுநகர் மாவட்டம். ஆனால் சமீப காலங்களில் பாலியல் புகார்களும், மாணவ மாணவிகள் தற்கொலைகளும் அடுத்தடுத்து விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் அரங்கேறி வருவதால் அப்பகுதி பொதுமக்களும், பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே அருப்புக் கோட்டையில் நிர்மலா தேவி மாணவிகளுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டும்விதமாக பேசிய செல்போன் உரையாடல் வெளிவந்து தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பபட்டு வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அதே அருப்புக்கோட்டை SBK மேல்நிலைப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவன் ஹரீஸ் என்பவர் தற்கொலை சம்பவம் அப்பகுதி பொதுமக்களையும், பெற்றோர்களையும் மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அருப்புக்கோட்டையில்
SBK மேல்நிலைப்பள்ளி மாணவன் ஹரீஸ் அந்தப் பள்ளியின் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து நமது குழுவினர் விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்ததை தொடர்ந்து, நமக்கே அதிர்ச்சியாக இருந்தது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் படிப்பறிவற்றவர்கள் அதிகம் வசித்துவரும் ஊரில் பத்தாம் வகுப்பில் அரசுப்பள்ளியில் படித்த மாணவன் ஹரீஸ் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறான்.
அந்த மாணவன் ஹரீஸ்-ஐ அழைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டியிருக்கிறார். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் எனக்கு படிக்க உதவுங்கள் என்று கலெக்டரிடம் மாணவன் ஹரீஸ் கேட்டுக் கொண்டதால் கலெக்டரே SBK பள்ளிக்கு மாணவனிடம் கடிதம் கொடுத்து இலவசமாக படிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். பள்ளி நிர்வாகமும், மாணவனுக்கு பள்ளியில் இடம் அளித்து விடுதியிலும் இலவசமாக (SC) கோட்டாவில் சேர்த்துள்ளார்கள். சில தினங்களுக்கு முன் ஹரீஸ் தனது நண்பர்களுடன் விடுதியில் இருந்து வெளியே சென்று பரோட்டா கடையில் பரோட்டா சாப்பிட்டு விட்டு திரும்பி விடுதிக்கு செல்கையில், அந்த வழியாக ரோந்து வந்த காவல்துறையினர் மாணவர்களை மடக்கி விசாரித்திருக்கிறார்கள்.
மாணவர்களும் நாங்கள் விடுதி காப்பாளருக்கு தெரியாமல் பரோட்டா சாப்பிட வந்தோம் என்று கூறி இருக்கிறார்கள். காவல்துறையினரும் மாணவர்களை போட்டோ எடுத்துக் கொண்டு இனிமேல் இப்படி வராதீர்கள் என்று எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள். மறுநாள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் நடந்த சம்பவத்தை கூறி மாணவர்களின் புகைப்படத்தையும் காட்டியிருக்கிறார்கள். உடனே தலைமை ஆசிரியர் மாணவர்களை அழைத்து அனுமதியில்லாமல் நீங்கள் விடுதியை விட்டு வெளியே சென்றதற்காக ஐந்தாயிரம் ரூபாய் (5000 /-) அபராதம் விதித்து குறிப்பிட்ட நாளுக்குள் பணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
பணம் கட்டத்தவறினால் பள்ளியை விட்டு நீக்கி விடுவதாக மிரட்டியிருக்கிறார். தலைமை ஆசிரியரின் மிரட்டலுக்கு பயந்து வசதியான மாணவர்கள் தங்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து பணத்தையும் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் ஹரீஸ் தாழ்த்தப்பட்ட ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்ததால் இவ்வளவு பெரிய தொகையை எப்படி செலுத்த முடியும் என்ற கவலையில் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். உடனே பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுக்க போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து மாணவனின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் தற்கொலை சம்பந்தமாக விசாரணை செய்தபோது பள்ளி நிர்வாகத்தால் தற்கொலைக்கு தூண்டப்பட்டு மாணவன் தற்கொலை செய்ததாக அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக SBK பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியின் நிர்வாகி, விடுதிக்காப்பாளர், பள்ளியின் மேலாளர் ஆகிய நான்கு பேர் மீது (306) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பெற்றோர்களும், பொதுமக்களும் மேலும் கூறுகையில் SBK பள்ளியில் சமீபகாலமாக அடாவடித்தனம் அதிகரித்துள்ளதால் பல மாணவர்கள் இதேபோல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இறுதியில் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். விடுதியில் சாப்பாடு சரியில்லாத காரணத்தால் ஒருநாள் வெளியில் சென்று பரோட்டா சாப்பிட சென்றிருக்கிறார்கள். அனுமதி இல்லாமல் விடுதியை விட்டு வெளியே சென்றது தவறுதான். ஆனாலும் தவறு செய்யும் மாணவர்களை அவர்கள் செய்த தவறை உணர்த்தி மேலும் தவறு செய்யாமல் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் ஆசிரியர்களுக்கு இருக்கிறதல்லவா! மாணவர்களின் பெற்றோரை அழைத்து தங்கள் மகன் தவறு செய்திருக்கிறான் என்ற தகவலை உணர்த்தி கண்டித்து இனிமேல் தவறு செய்யாமல் இருக்க கடிதம் எழுதி வாங்கி மாணவனை கண்டித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் இன்று ஹரீஸின் உயிர் பிரிந்திருக்காது என்று வேதனையுடன் கூறினார்கள்.
இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள குழந்தை ஏசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் பேச்சியம்மாள் என்ற மாணவியை பள்ளியின் தமிழ் ஆசிரியை திட்டியதால் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் பள்ளிச் சீருடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது சம்பந்தமாக விசாரிக்கையில் பள்ளியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் மாணவி பேச்சியம்மாள் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். பள்ளியின் தமிழ் ஆசிரியை சக மாணவிகள் மத்தியில் நீயெல்லாம் இந்தப் பள்ளியில் 100 % தேர்ச்சி விகிதத்தை கெடுத்து விடுவாய். மரியாதையாக TCயை வாங்கிக் கொண்டு ஓடி விடு என்று அசிங்கமாக திட்டியதால் அவமானம் தாங்க முடியாத பேச்சியம்மாள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏராளமான பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியையை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நமது நாட்டின் எதிர்காலமே மாணவர்கள் தான். இளமை பருவத்தில் தங்களை அறியாமல் மாணவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை திருத்தி நல்வழிப்படுத்தி நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பும், கடமையையும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
ஆசிரியப் பணி அறப்பணி என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். தவறுகள் நடந்த அரசு உதவி பெறும் இந்த இரண்டு தனியார் பள்ளிகள் மீது தமிழக அரசும் பள்ளி கல்வித்துறையும் விரைவில் நடவடிக்கை எடுத்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது.
–சூரியன்