முன்னாள் எம்எல்ஏவை துப்பாக்கி காட்டி மிரட்டிய சுங்கச்சாவடி ஊழியர்கள்
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.என்.காளியண்ணனின் 24ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம், உள்ளாட்சித் தேர்தல் வெற்றி விழா கூட்டத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாலபாரதி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் பாலபாரதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் காரில் வந்த போது கரூர் மாவட்டம் மணவாசி சுங்கச்சாவடியில் அனுமதி சீட்டு இருந்தும் தனது காரை சுங்கசாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இது குறித்து சுங்கச்சாவடி ஊழியர்களுடன் பேசி கொண்டிருக்கும் போதே துப்பாகி காட்டி ஒருவர் என்னை பயமுறுத்தினார்.
இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுங்கச்சாவடியில் ஆயுதம் ஏந்திய நபர்களை வைத்திருப்பது பொது மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, ஒரு தனியார் நிறுவனம் சுங்கச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவர்களை நிற்க வைப்பது சரியான நடவடிக்கை இல்லை.
கேரளா உள்பட வட மாநிலங்களைப் போல் சுங்கச்சாவடிகளை உடனடியாக முற்றிலும் நீக்கவேண்டும். சுங்கச்சாவடிகளால் தமிழகத்தில் தொழில்கள் முடங்கியுள்ளது. முறையற்று வசூலிக்கப்படும் பணத்தை மாநில அரசு கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறையும் எனக் கூறி கொண்டுவரப்பட்ட பாஸ்டேக் முறையால், காத்திருக்கும் நேரம் 29 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் காத்திருக்கும் போது வீணாகும் எரிபொருளால், ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது. இதைத் தவிர்ப்பதற்காக ஆன்லைன் முறையில் கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் என்ற முறை கொண்டு வரப்பட்டு கட்டாயமாக்கப்பட்டது.
பாஸ்டேக் வசதி கொண்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிப்பை ஸ்கேன் செய்வதினால், டிஜிட்டல் முறையில் கட்டணம் விரைவாக வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதனால் வாகனங்கள் விரைவாக சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் எனக் கூறப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக பாஸ்டேக் முறையால் காத்திருக்கும் நேரம் 29 சதவீதம் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய சுங்கச்சாவடி போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2019 நவம்பர் 15 முதல் டிசம்பர் 14 வரை, 488 சுங்கச்சாவடிகளில், வாகனம் ஒன்றுக்குச் சராசரி காத்திருப்பு நேரம் 7 நிமிடங்கள் 44 விநாடிகளாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் டிசம்பர் 15 முதல், 2020 ஜனவரி 14 வரையிலான காலகட்டத்தில் சராசரி காத்திருப்பு நேரம் 9 நிமிடங்கள் 57 விநாடிகளாக அதிகரித்துள்ளது. இதற்கு அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் முறைக்கு மாறாததே காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், ஆன்லைன் பரிவர்த்தனையில் ஏற்படும் கோளாறுகளுமே பொதுவாகக் காத்திருப்பு நேரம் அதிகரிப்பதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.