தமிழகம்

உயரும் மின்கட்டணம்..! அதிர்ச்சியில் மக்கள்…

தமிழகத்தில் அண்மைக்காலமாக மின் கட்டணம் குறித்த புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு மாதம் வழக்கமான மின்கட்டணமும், அடுத்த மாதம் இரண்டு மூன்று மடங்காக கட்டணம் உயர்ந்து ரசீது பெறப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மூன்று கோடியே பத்து லட்சம் மின் இணைப்புதாரர்களின் மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புகார்கள் ஆகியவற்றினை தெரியப்படுத்த கடந்த ஜூன் மாதம் மின்நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அந்த சேவை மையத்தில் ஒரு ஷிப்ட்டுக்கு 65 நபர்கள் வீதம் மூன்று ஷிப்டுகளுக்கு 195 நபர்கள் என பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மின்னழுத்த ஏற்ற / இறக்கம், உடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றிகள், மின்தடை குறித்த தகவல், குறைந்த மின்னழுத்தம், மின்கட்டணம் குறித்த புகார்கள் ஆகியவைக்கு 94987 94987 என்ற பிரத்யேக செல் நம்பரும் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், மின்கட்டணம் சம்மந்தமாக சமூக ஊடகங்களில் புகார்கள் வந்தாலும் அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை மின்நுகர்வோர் சேவை மையத்தில் 31.07.2021 வரை 1,71,344 எண்ணிக்கையில் புகார்கள் வரப்பட்டுள்ளன. அதில் 1,59,186 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் இதில் 12,158 புகார்கள் நடவடிக்கைகளில் உள்ளதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக மின்கட்டணம் வந்தவர்களுக்கு ட்விட்டர் வாயிலாக புகார் கொடுக்கப்பட்டு அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்படும் பயனாளிகள் தங்களது மின்கட்டண ரசீதை பதிவிட்டு அமைச்சர் செந்தில்பாலாஜியை டேக் செய்து பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில், ட்விட்டரில் வாடிக்கையாளர் ஒருவர் கடந்த மாதத்தை விட இந்த மாதம் பலமடங்கு மின் கட்டணம் வந்துள்ளதாக புகாரை பதிவு செய்துள்ளார். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணுக்கு தெரிந்து சில புகார்கள் வந்தாலும், சாமானியர்கள் பலருக்கு இப்படி நேரும் பட்சத்தில் புகார் தெரிவிக்கக்கூட வசதி இல்லாமல் வேறு வழியின்றி கட்டணத்தை கட்டிவிடுகின்றனர். இதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வை கொடுக்கவேண்டும் என்றும் கட்டணம் மாதத்திற்கு மாதம் பலமடங்கு உயர்வதன் காரணத்தை தெளிவு படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பிரபு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button