அரசியல்

நாங்கள் இல்லாவிட்டால் அ.தி.மு.க ஆட்சியே இல்லை!- : கொதிக்கும் அன்புமணி…

மத்திய பி.ஜே.பி அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு மாநிலங்களவையில் ஆதரவாக பா.ம.க. வாக்களித்தது. அதற்காக பா.ம.க கடும் விமர்சனத்துக்குள்ளானது. தொடர்ந்து அதுகுறித்துப் பேசிய மருத்துவர் ராமதாஸ், “மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் கூட்டணி தர்மத்துக்காகவே பா.ம.க ஆதரித்தது.

நாங்கள் வாக்களித்தது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அல்ல. அன்புமணியின் மந்திரிப் பதவிக்காகவும் நாங்கள் வாக்களிக்கவில்லை” என்று கூறியிருந்தார். ஆனாலும் பா.ம.க-வை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர் நெட்டிசன்கள்.

இதற்கிடையே, புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை ஓமந்தூரிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு நடைபெற்றது. மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மேலும், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, தமிழகத்தில் இட ஒதுக்கீடு அளவை அதிகரிப்பதற்காக சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு, தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ-கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், விக்கிரவாண்டித் தேர்தலில் வெற்றியைத் தேடிக் கொடுத்த ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பாராட்டுகள், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு மாநிலங்களவையில் ஆதரவாக வாக்களித்துவிட்டு தற்போது கட்சிக் கூட்டத்தில் குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி இரட்டை நிலைப்பாட்டை பா.ம.க எடுத்துள்ளது இந்த விவகாரத்தில் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தில் பேசிய அன்புமணி, “அ.தி.மு.க-வுடன் பா.ம.க-வுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அவர்கள் ஆட்சியில் இருந்திருக்க முடியாது. மக்களவைத் தேர்தல் நடைபெற்ற அதேநேரத்தில், 23 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. ஆட்சி நீடிக்க வேண்டும் என்று நம்மிடம் அ.தி.மு.க கேட்டுக்கொண்டது. அதனால்தான் அனைத்து தொகுதிகளையும் விட்டுக்கொடுத்தோம். ஆனால், அந்த அ.தி.மு.க-வோ உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க-வுக்கு வெறும் கால் சீட்டு, அரை சீட்டு என்று கொடுத்து கெஞ்ச வைத்தார்கள். பா.ம.க-வின் கொள்கையான கூட்டணியே வேண்டாம் என்ற கொள்கையை மாற்றி அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்குச் சென்றோம். ஆனால், அதற்கான அங்கீகாரம் நமக்குக் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வின் அமைச்சர்கள் நமக்குக் குறைந்த அளவிலேயே இடம் கொடுத்தனர். அதனால் ஆளும் கட்சியின் தலைமை எங்களின் கருத்துகளை ஏற்று இனி வரும் காலங்களில் சரிசெய்ய வேண்டும் என்று இந்தப் பொதுக்குழுவின் மூலம் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். தி.மு.க பன்னாட்டு நிறுவனத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து சமூக வலைதளங்களை தனக்கு ஆதரவாகவும், மற்ற கட்சிகளுக்கு எதிராகவும் திருப்பும் முயற்சியில் இருக்கிறார்கள். அதற்காக ஒரு பதிவுக்கு 200 ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். பொய்ச் செய்திகளைப் பரப்புவது தி.மு.க-வுக்கு கை வந்த கலை.
குடியுரிமைச் சட்டம் குறித்து சில தலைவர்களுக்கே புரிதல் இல்லை. இந்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கோலம் போட்டதற்காக கைது செய்யப்பட்டால் அது தவறானது. இது குறித்து மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு தமிழகத்துக்குத் தேவையில்லாதது” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மருத்துவர் ராமதாஸ், “ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நீங்கள் உழைக்கும் உழைப்பு, 80 தொகுதிகளில் 80 லட்சம் வாக்குகளைப் பெற வேண்டும். அப்படி 80 லட்சம் வாக்குகளைப் பெற்றால் பா.ம.க-தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதேபோல நம் கட்சியினர் மிதிவண்டி, இருசக்கர வாகனம் என ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button