சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்ப பெற்றது திமுக : புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் : மு.க.ஸ்டாலின்
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை வைத்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சபாநாயகர் தனபால் முயற்சி செய்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி, அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் கடிதம் வழங்கப்பட்டது.
தமிழக சட்டமன்றம் கூடிய நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டது. தற்போதைய சூழலில் சட்டமன்றத்தில் அதிமுக அரசுக்கு தேவையான பெரும்பான்மை பலம் உள்ளது.
இதனால், திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் பட்சத்தில் அதில் திமுகவுக்கு தோல்வி தான் கிடைக்கும். சபாநாயகர் வென்று விடுவார் என்ற நிலை இருந்தது. இதனை உணர்ந்த திமுக சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறத்தப் போவதில்லை என்று அக்கட்சி அறிவித்தது.
இது தொடர்பாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறுகையில், “அண்றைக்கு இருந்த சூழ்நிலையில், சபாநயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது நிலை மாறியுள்ளது. தற்போதைய சூழலில் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கோரப்போவதில்லை என்று சட்டமன்றத்தில் திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் குடிநீர் பிரச்னைக்கு திமுக ஆட்சியில் வழங்கிய முக்கியத்துவம் போன்று அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால் தான் இன்று தமிழகத்தில் இத்தகைய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மறைந்த விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணியின் படத்திறப்பு விழா, அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பத்தில் நடைபெற்றது. அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்களால் தான் இந்த வெற்றி கிடைத்திருக்கின்றனது என்பது உண்மை. யாரும் எதிர்பார்க்காத நிலையில், அகில இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தளவில் அது நடக்காத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்கிறது என்று ஒரு குறை தமிழக மக்களிடம் உள்ளது. விரைவில் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும். எனவே தமிழக மக்கள் அது குறித்து கவலைப்பட வேண்டாம்.
மேலும் சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திரும்ப பெற்றது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, முன்னதாக டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக 3 சட்டமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியாகவே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கைகளை பார்த்த உச்சநீதிமன்றமே 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. இதனால் தற்போதைய சூழலில் நம்பிக்கை இல்லா தீர்மானம் அவசியமற்றதாக உள்ளது. எனவே தான் இந்த விவகாரத்தில் ஜனநாயக முறையோடு கருணாநிதி கற்றுத் தந்த ராஜதந்திரத்தை திமுக பயன்படுத்தியது.
உடனடியாக அனைத்து பத்திரிகைகளிலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்துவிட்டு திமுக பதுங்குகிறது என்று கூறுகிறார்கள். புலி எப்போது பதுங்குமென்றால், பாய்வதற்காகத் தான் பதுங்கும். ஓடி ஒளிவதற்கு பதுங்காது. பாய வேண்டிய நேரத்தில் பாய்வோம். முடிவு கட்ட வேண்டிய நேரத்தில் முடிவெடுப்போம் என்று பேசினார்.