கொரோனா சோதனை கருவிகள் எண்ணிக்கை… : தமிழகத்தில் நிலவும் மர்மம்!
சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என மார்தட்டி கொண்டிருக்கும் நிலையில், கொரோனா பரிசோதனைகளில் அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது பின்னடவை சந்தித்து வருவது செய்திகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 16ஆம் தேதி நிலவரப்படி 10 லட்சம் பேருக்கு 337 சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. தலைநகர் டெல்லில் இதே 10 லட்சம் பேருக்கு 930 சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் 476 பேருக்கும், ஆந்திராவில் 379 பேருக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் குறைவு தான் என்ற போதிலும், அதிலும் மற்ற மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கியே உள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய மக்கள் தொகை அடர்த்தியை ஒப்பிடும் போது கொரோனா தொற்று குறைவே என்ற வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால், சோதனை அடிப்படையில் இந்தியா மற்ற நாடுகளை விட குறைவான பரிசோதனைகளை மேற்கொள்வதால் தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என உலக நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
கொரோனா தொடர்பான சோதனைகளை எவ்வளவுக்கு எவ்வளவு துரிதப்படுத்துகிறோமோ, பரவலாக்குகிறோமா அப்போதுதான் அந்த கொடிய நோயில் இருந்து தப்ப முடியும் என்ற எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்தகைய சோதனைகளை மேற்கொள்வதற்கு முக்கியமான ரேபிட் கருவிகள், பிசிஆர் கருவிகள் நமது நாட்டில் பற்றாக்குறையாக உள்ளது. இதனை சீனாவிடம் ஆர்டர் செய்து பல நாட்கள் கழித்து தமிழகத்துக்கு வந்துள்ளன, அதுவும், வெறும் 24 ஆயிரம் ரேபிட் கருவிகள் மட்டுமே வந்துள்ளன.
இதனிடையே, கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொரோனா நெருக்கடியிலிருந்து தமிழகம் மெதுவாக வெளியே வருகிறது என்று நினைக்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆம், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாங்கள் போராடுகிறோம். கட்டுப்பாட்டு மண்டலங்கள் குறிக்கப்பட்டுள்ளன, எனவே சமூக பரவல் இல்லை. முதலமைச்சரின் அறிவுறுத்தல்களின்படி சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 2ஆம் தேதி 3,272 சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 15ஆம் தேதி 21,994 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.
ஆனால், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடம்பில் இருக்கும் தொற்றை கண்டறிய போதுமான ரேபிட், பிசிஆர் கருவிகள் நம்மிடம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான, சுகாதாத்துறை செயலர், தலைமை செயலர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரின் தகவல்களில் அப்பட்டமான வேறுபாடுகள் தெரிவது அவர்களது செய்தியாளர் சந்திப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
ஏப்ரல் 8ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்ட போது, தொடக்கத்தில் 14,000 கருவிகள் நம்மிடம் இருந்தன. அடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை குறைந்து விட்டது. எனினும், நம்மிடம் போதிய கருவிகள் உள்ளன” என்றார். அதே ஏப்ரல் 12ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் சன்முகம், 14,000 கருவிகள் நம்மிடம் இருந்தன. சீய்மன்ஸ் நிறுவனத்திடம் 20,000 கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அது நமக்கு கிடைக்கும்” என்றார். அதற்கு அடுத்த நாள் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நம்மிடம் 24,000 கருவிகள் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், இந்த எண்ணிக்கை கடந்த வாரம் விஜயபாஸ்கர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது புதிய உச்சத்தை எட்டியது.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், தொற்றுநோயை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருந்தது. ஜனவரி 22ஆம் தேதிக்கு முன்னரே மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவசங்களுக்கு (PPE, FaceMask) தமிழக மருத்துவ சேவைகள் கழகத்தின் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்த அமைச்சர், ஜனவரி 22ஆம் தேதி ரூ.146 கோடிக்கு ஆர்டர் செய்யப்பட்டது. மீண்டும் ரூ.204.84 கோடிக்கு மொத்தமாக பொருட்கள் வாங்கப்பட்டது என பணம் செலவழிக்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார்.
ரேபிட், பிசிஆர் கருவிகள் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர், 1,35,000 கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டது. 1 லட்சம் கருவிகள் வந்துள்ளன. அதுதவிர, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் இருந்து 20,000 கருவிகள் வந்துள்ளன. டாட்டா நிறுவனம் 40,000 கருவிகளை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, 1,35,000 கருவிகள் எப்போது ஆர்டர் செய்யப்பட்டது, எந்த நிறுவனத்திடம் ஆர்டர் செய்யப்பட்டது என்ற கேள்வியை தவிர்க்கும் வகையில், கருவிகள் முன்பே ஆர்டர் செய்யப்பட்டு விட்டன என்றதுடன், சீய்மன்ஸ் நிறுவனத்திடம் ஆர்டர் செய்யப்பட்டது என்றார்.
ஆனால், சுகாதாரத்துறை செயலருக்கோ, தலைமை செயலருக்கோ இவ்வளவு பெரிய ஆர்டர் சீய்மன்ஸ் நிறுவனத்திடம் மேற்கொள்ளப்பட்டது குறித்து எப்படி தெரியாமல் போனது என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. அல்லது கொரோனா தொற்றை முழுவீச்சுடன் அரசு எதிர்கொண்டு வருவதை தெரிவிக்க எண்களை மிகைப்படுத்தி அமைச்சர் தெரிவித்து விட்டாரோ என்ற கேள்விகளும் எழுகிறது. எனினும், ஜனவரி 22ஆம் தேதியில் இருந்தே அரசு கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருந்தது என்பதை அமைச்சர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
அதேசமயம், Siemens Healthineers.com வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கோவிட்-19 நோயை உருவாக்கும் வைரஸை கண்டிறியும் சோதனை கருவிகளை ஏப்ரல் 2ஆம் தேதிதான் Siemens Healthineers.com நிறுவனம் அறிமுகப்படுத்தியது. சீய்மன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுனில் மாத்தூர் சார்பில் ஏப்ரல் 3ஆம் தேதி அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “நாடு முழுவதும் ரூ.20 கோடிக்கான முக்கியமான மருத்துவ உபகரணங்களை தயாரிக்க முன்வந்துள்ளது. 40,000 பி.சி.ஆர் கருவிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகமானது, ஆர்டர்களை வழங்குவதற்கும் எந்தவொரு மருத்துவ உபகரணங்களையும் வாங்குவதற்குமான ஒரே கொள்முதல் அதிகாரத்தை பெற்ற அமைப்பாகும். அறுவை சிகிச்சை நுகர்பொருட்களுக்கான ஆர்டர்கள் வழங்கப்பட்ட சப்ளையர்களின் பெயர்களின் விவரங்களை வெளியிட்டுள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம், சீய்மன்ஸிடம் மேற்கொள்ளப்பட்ட ஆர்டர்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– சூரிகா