சிறார் ஆபாசப்பட விவகாரம்.. : விசாரணை வளையத்தில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்
சிறார் ஆபாசப்பட விவகாரத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட 60 பேருடைய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக அவர்களில் 15 பேரை அவர்களின் IP முகவரி மூலம் கண்டுபிடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்களை இணையதளங்களில் பதிவேற்றம், பதிவிறக்கம் மற்றும் பகிர்பவர்கள் மீது போக்சோ மற்றும் தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
அதன் தொடர்ச்சியாக விறுவிறுவென விசாரணையில் இறங்கிய போலீசார், சிறுவர், சிறுமிகளை வக்கிர புத்தியுடன் ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை, சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்ததாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஆபாச பட விவகாரத்தில் இது முதல் கைது நடவடிக்கை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையத்தில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை பாய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் பரவியது. ஆனால் சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை பகிர்பவர்கள், பதிவிறக்குபவர்கள், பார்ப்பவர்கள் மீது தான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை விளக்கம் அளித்தது.
இதுதொடர்பாக சுமார் 3 ஆயிரம் பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சம்மன் அனுப்பி, விசாரணைக்குப் பிறகு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை கூறியிருந்தது. இந்நிலையில், சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்ததாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற 42 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளான்.
சமூக வலைத்தள பதிவுகளை கண்காணித்து வந்ததில், ஒரு குறிப்பிட்ட செல்போன் எண் மூலம் நிலவன் நிலவன், ஆதவன் ஆதவன் என்ற பெயரில் ஃபேஸ்புக் ஐடிகளை உருவாக்கி ஆபாச கன்டன்ட்டுகளை கிறிஸ்டோபர் பகிர்ந்து வந்தது கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போக்சோ சட்டத்தின் 13, 14,15 ஆகிய பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67(ஏ), 67(பி) ஆகிய பிரிவுகளின் கீழும், திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல்நிலையை போலீசார் கிறிஸ்டோபரை கைது செய்துள்ளனர். 3 வெவ்வேறு முகநூல் கணக்குகள் மூலம் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்த கிறிஸ்டோபரின் நட்புப் பட்டியலில், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் 60 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தனது நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்டோபரின் முகநூல் பக்கங்களில் தொடர்ந்து ஆபாச படங்கள் மட்டுமே பதிவேற்றப்பட்டு வந்ததால் அடுத்தடுத்து முகநூல் நிறுவனத்தால் முடக்கப்பட்டன. ஆனாலும் புதிய பெயரில் புதிய ஐடியில் கிறிஸ்டோபர் அடுத்தடுத்து கணக்குகளை தொடங்கி ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளான்.
கிறிஸ்டோபரின் முகநூல் பக்கத்தில் இணைந்திருந்த சுமார் 60 பேரில் முதற்கட்டமாக 15 பேரின் IP முகவரிகள் குறித்தான விசாரணை தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக திருச்சியில் 15 இடங்களில் போலீசார் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது மற்றும் பதிவேற்றம் செய்தவர்களின் பல மிறி முகவரிகளை அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பகிர்ந்ததாக அடுத்த பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.