“ஹீரோ” யாருக்கு சொந்தம்.! : மோதும் தயாரிப்பாளர்கள்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள ஹீரோ படம் தனது கதை என சொந்தம் கொண்டாடி, இயக்குனர் அட்லியின் உதவியாளர் ஒருவர், சினிமா எழுத்தாளர் சங்கத்தில் அளித்துள்ள புகார், திரையுலகினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
மணிரத்னத்தின் மவுனராகத்தை ராஜா ராணியாகவும், விஜயகாந்தின் சத்ரியனை விஜய்க்கு தெறியாகவும், ரஜினியின் மூன்றுமுகம், கமலின் அபூர்வ சகோதரர்கள் இரண்டையும் கலந்து ரசிகர்களுக்கு மெர்சல் காட்டியவர் இயக்குனர் அட்லி..!
அண்மையில் வெளியான பிகில் படத்தின் கதை கூட ஷாருக்கானின் சக்தே இண்டியா மற்றும் சரத்குமாரின் அரசு படத்தின் சாயலில் இருப்பதாக சொல்லப்பட்டது. தரமான பல மசாலாப் படங்களின் காட்சிகளை சுட்டு புது இட்லியாக அளிப்பது அட்லியின் சிறப்பு..! என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.
அப்படி இருக்க அட்லியிடம் உதவியாளராக உள்ள போஸ்கோ பிரபு என்பவர் தனது கதையை திருடி, இயக்குனர் மித்ரன் ஹீரோ படத்தை எடுத்துவிட்டார் என்று சினிமா கதை எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்திருப்பது தமிழ் திரை உலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இருந்தாலும், அந்த புகாரை பெற்று விசாரணையை தொடங்கி உள்ளார், ஒரு காலத்தில் திரைக்கதை மன்னன் என்று வர்ணிக்கப்பட்ட இயக்குனர் கே.பாக்யராஜ்.
ஹீரோ படமே ஷங்கரின் ஜென்டில்மேன் படத்தின் பாதிப்பு என்று இயக்குனர் மித்ரன் வெளிப்படையாகவே தெரிவித்திருந்த நிலையில், சிவகார்த்திகேயனின் ஹீரோ கதையில் வருகின்ற தங்கச்சி கதாபாத்திரம் போலவே, தனது கதையிலும் வருவதாக சுட்டிக்காட்டி போர்க்கொடி உயர்த்தியுள்ளார் அட்லியின் உதவியாளர் போஸ்கோ பிரபு.
தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் ராஜேஷ் தரப்பில் கே.பாக்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு தரவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பணம் கொடுப்பதற்கு முன்னால் இரு கதைகளும் ஒன்றுதானா? என்று ஒப்பிட்டு பார்த்துவருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே 1994 ஆம் ஆண்டு ரகுமான் நடிப்பில் வெளியான ஹீரோ என்ற படத்தின் பெயரை, இந்த படத்திற்கு வைத்த நிலையில், இந்த தலைப்பு தங்களுக்கு தான் சொந்தம் என்று 4 தயாரிப்பாளர்கள் அடித்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
ஹீரோ தலைப்பை தயாரிப்பாளர் கவுன்சிலில் முதலில் காக்கா முட்டை மணிகண்டன் பதிவுசெய்து வைத்திருந்ததாகவும் அதனை இலவசமாக வாய்மொழியாக பெற்றுக் கொண்ட தயாரிப்பாளர் எஸ்.எஸ். குமரன், அதனை கே.ஜே.ராஜேசுக்கு 25 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகின்றது.
இந்த தகவலை அறிந்த மணிகண்டன், தன்னிடம் தடையில்லாச் சான்று வாங்காமல் தலைப்பை விற்றது செல்லாது எனவும், அந்த தலைப்பு தனக்கே சொந்தம் எனவும் நீதிமன்றத்தை நாட, ஹீரோ தலைப்பு யாருக்கு சொந்தம் என்று முடிவாகாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, “நான் ஈ” நடிகர் சுதீப் நடிக்கும் புதிய படத்திற்கும் ஹீரோ என்று பெயர் வைத்துக் கொண்டு அவர்களும் ஹீரோவுக்காக கோதாவில் குதித்துள்ளனர்.
20 ந்தேதி படம் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் படம் சென்சார் ஆகாததால், சதுரங்கத்தில் ராஜாவுக்கு வைப்பது போல செக் வைக்கப்பட்ட நிலையில் ஹீரோ தலைப்பு மட்டுமல்ல, ஹீரோ சிவகார்த்திகேயனும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரு பிரச்சனைகளின் பின்னணியிலும் விஸ்வாசமான தயாரிப்பாளரும், பட்டாசான நாயகனும் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
& சாமி