தமிழகம்

கல்லாறு கனவுத் திட்டம்

மதுரை மாநகராட்சி அதிகாரிகளால் மறுபடியும் வேகமெடுக்கிறது பைப்லைன் மூலம் லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம்.

ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் மொத்த நிதியையும் பெற்று தவணை முறையில் அதை அடைப்பதற்கான வேலையும் தீவிரம் எடுத்திருக்கிறது…

என்ன நடக்கப் போகிறது…

கொஞ்சம்கூட நீர் சிக்கனம் எதுவுமின்றி மதுரை மாநகராட்சியில் இருக்கும் அத்தனை திருமண மண்டபங்களுக்கும் நேரடியாக முல்லைப்பெரியாறு நீர் செல்கிறது என்பது தெரிந்தும்… இந்த பைப் லைன் திட்டத்தை செயல்படுத்த துணிந்து இருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்…
லோயர்கேம்ப் பிலிருந்து மதுரைக்கு பைப்லைன் மூலமாக குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் பாதிக்கப்படுவார்களா…? என்ற இன்றைய கேள்வி நாளை விவாதமாகலாம்…

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் பகுதியை வளப்படுத்துவதற்காக போடப்பட்ட பதினெட்டாம் கால்வாயின் பிரதான நோக்கம் பாசனமல்ல….அந்த கால்வாய் செல்லும் வழியெங்கிலும் நீர்க்கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதே பிரதான நோக்கம்…அதற்காக வெட்டப்பட்ட பதினெட்டாம் கால்வாயில் ஆண்டுக்கு ஒரு மாதம் நீர் திறப்பதே அபூர்வமாகிவிட்டது. கொட்டக்குடி ஆற்றை நம்பியிருக்கும் நகராட்சியான போடியில் வாழும் அப்பாவிகளோ…கடும் மழை வெள்ளக்காலத்தில் மட்டுமே தண்ணீரைப்பார்க்கிறார்கள்…கொட்டக்குடி ஆற்றில்.

இந்த நிலையில் மதுரைக்கு பைப்லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்காக மதுரை மாநகராட்சிஅதிகாரிகள் தேர்வு செய்திருக்கும் பகுதி கம்பம் பள்ளத்தாக்கு கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேலே ஐம்பது மீட்டர் உயரத்தில் உள்ளது..இந்த தடுப்பணை மூலம்தான் கூடலூர் கம்பம் போன்ற நகராட்சிகளுக்கும் லட்சம்பேரை நெருங்கிக்கொண்டிருக்கும் உத்தமபாளையம் பேரூராட்சிக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

மேலாக 2007 ம் ஆண்டு புதுப்பட்டி… நாராயணத்தேவன்பட்டி.. தேவாரம்… பண்ணைப்புரம்… கோம்பை போன்ற நகரங்களை உள்ளடக்கிய 3 பேரூராட்சிகளுக்கும்…நான்கு கிராமப்பஞ்சாயத்துகளுக்கும் ரூபாய் 8 கோடியே 77 லட்சம் செலவில் 2 புதிய நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆக லோயர்கேம்ப் தடுப்பணையிலிருந்து நான்கு குடிநீர் திட்டங்கள் இப்போது செயல்பட்டு வருகிறது…

புதிதாக மதுரைக்கு பைப்லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்ல அரசு முயற்ச்சிக்குமானால் மேற்கண்ட நான்கு குடிநீர் திட்டங்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும்…தேனி மாவட்டம் பெரிய குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்க வேண்டிய நெருக்கடி வரும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் மதுரைக்கு குடிநீர் கொண்டுவர முல்லைப்பெரியாறில் தடுப்பணை கட்டி கொண்டுவருவதைவிட கம்பம் மெட்டுக்கு சற்று மேலே உற்பத்தியாகும் முல்லைப்பெரியாற்றின் கிளை நதிகளுள் ஒன்றான கல்லாறிலிருந்து இரண்டு கிமீ தொலைவிற்கு ஒரு சுரங்கம் வெட்டி நேரடியாக தமிழகத்திற்குள் தண்ணீரை இறக்கி மதுரைக்கு கொண்டு சென்று குடிநீர் பஞ்சத்தைப்போக்கலாம் என்பதே…

அதற்காக அன்று கேரள முதல்வராகயிருந்த தோழர் அச்சுதமேனனை சந்திக்க திருவனந்தபுரத்திற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் கோட்டயத்தில் நடந்த மறைந்த தலைவர் சாக்கோவின் சிலைதிறப்பு விழாவிலே கலந்து கொண்டும் தனது கோரிக்கையை வலியுறுத்தினார்…

அதோடு நில்லாமல் 1983 ம் ஆண்டு அன்றைய கேரள காங்கிரஸ் முதல்வர் கருணாகரனை சந்தித்துப்பேச 1983 ம் ஆண்டு மே மாதம் 17 ம் தேதி மதுரை மேயர் பட்டுராஜன் தலைமையில் ஒரு குழுவை பேச்சுவார்த்தை நடத்த கேரளாவிற்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு கொடைக்கானலுக்கு வந்த இடத்தில் மறுபடியும் கருணாகரனை சந்தித்துப்பேசினார் பட்டுராஜன்..
ஆனால் பேச்சுவார்த்தை சுமூகமாக செல்லும்போதே எம்ஜிஆர் நோயுற்றதால் பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டது…
கல்லாறு குடிநீர் திட்டத்தை கலைஞரும் ஜெயலலிதா அம்மையாரும் கண்டுகொள்ளவேயில்லை…கல்லாறு நீர் மட்டும் மதுரை மாநகராட்சிக்கு கிடைத்திருக்குமென்றால் நாளொன்றுக்கு 2,000 லட்சம் லிட்டர் குடிநீர் பெறமுடியும். இன்று பைப்லைனை தீவிரப்படுத்தும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் எத்தனை பேருக்கு கல்லாறு குடிநீர் திட்டம் பற்றித்தெரியும். பொதுவாகவே கேரள மாநிலத்தில் நீர்ப்பயன்பாடு மிக மிகக்குறைவு..

தமிழ்நாட்டின் நீர்வளம் 1300 டிஎம்சி என்றால் கேரளத்தின்நீர்வளம் 2500 டிஎம்சி..இதில் மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கும் மொத்த நீரின் அளவு மட்டும் 1100 டிஎம்சி…இது மேட்டூர் அணையில் நிரம்பிக்கிடக்கும் நீரைப்போல 11 மடஙகு நீராகும். தங்களுக்கு போக மீதம் உள்ள நீரை கேரளா நமக்குத்தந்தாலே 22 லட்சம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறமுடியும்…

1978 ம் ஆண்டு மத்திய திட்டக்குழு தனது நீண்ட ஆய்வின் அறிக்கை ஒன்றை வெளியிட்டது… அதன்படி கேரளாவில் மேற்கு நோக்கி ஓடி வீணாக அரபிக்கடலில் கலக்கும் 85 ஆறுகளை தமிழகத்தை நோக்கி திருப்பமுடியுமென அறிவித்தது… இதுதொடர்பாக தொடர்ந்து 11 முறை மத்திய, கேரள, தமிழக அரசுகள் பேசியும் எவ்வித பயனுமில்லை. கேரளாவில் ஓடும் பெரிய ஆறுகளான சாலியாறு.. பாரதப்புழா…சாலக்குடியாறு… ஆழியாறு மற்றும் பெரியாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளெல்லாம் தமிழகத்திற்குள்ளேதான் இருக்கிறது என்பதை மலையாளச்சகோதரர்கள் மறக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்…

இதற்கெல்லாம் மேலாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு பச்சைக்கொடி காண்பித்திருக்கிறது ..அப்படி ஒருவேளை நியூட்ரினோ ஆய்வக கட்டுமான வேலை ஆரம்பித்தால் அதற்கும் முல்லைப்பெரியாறு தண்ணீரே பயன்படுத்தப்படும் என்ற நிலையில்…
விரைவில் வளம்செழித்த தேனியும் வறண்டு பாலையாகுமோ என்ற அச்சமும் பயமும் என்னைச்சூழ்கிறது…

எனவேதான் கேரளாவோடு பேச்சுவார்த்தை நடத்தி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தையும் 152 அடியாக உயர்த்தி…கையோடு கல்லாறு குடிநீர் திட்டத்திற்கும் ஒப்புதல் பெறப்படுமென்றால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வாழும் காலம்வரை நன்றியோடு இருப்பார்கள்…
நோக்கம் மதுரைக்கு பைப்லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்வதை தடுப்பதல்ல…எங்கள் மாவட்ட நீராதாரத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டுமென்பதே..
எதிர்பார்ப்பில்….
பென்னிகுக் முல்லைப்பெரியாறு பாசன விவசாய சங்கம் மற்றும் தேனி மாவட்ட குடிமக்கள்…

& தேனி.ராஜசிம்மன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button