தூர்வாரிய இளைஞர்கள் ..! : வாட்ஸ்அப் குரூப் மூலம் அசத்தல்
நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்க அரசு அதிகாரிகள் முன்வராத நிலையில், கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி நிதி திரட்டி, சொந்த செலவில் சீமை கருவேலமரங்களை அகற்றி நீர்நிலைகளை பராமரித்து அசத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கருக்காத்தி கிராமம். மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கருக்காத்தி கிராமமும் தப்பவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும், பலன் இல்லாததால், இளைஞர்கள் 100 க்கும் மேற்பட்டோர், வெளியூர், வெளிநாடுகளில் பணியாற்றும் தங்களது கிராமத்தைச் சேர்ந்தவர்களை கருக்காத்தி 2025 என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் மூலம் இணைத்தனர். அதில் நீர்நிலைகளில் மண்டிக்கிடக்கும் சீமைக்கருவேலமரங்களை அப்புறப்படுத்தி நீர்தேவையை பூர்த்தி செய்ய நிதி திரட்டினார்கள்.
மேலும் ஆண்டுதோறும் திருவிழாவில், ஆடல் பாடல் நிகழ்ச்சியை ரத்து செய்து, அதற்கு செலவிடும் பணத்தை நீர்நிலைகளை சீரமைக்கும் பணிக்கு ஒதுக்கினார்கள். இதன் மூலம் சீமை கருவேலமரங்களை அகற்றியும், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. பாழடைந்து கைவிடப்பட்ட கிணறுகளையும் தூர்வாரி சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்ததன் விளைவாக, இன்று இந்த கிராமத்திற்கு தேவையான குடிநீரை, புதிதாக புத்துயிர் பெற்ற கேணிகள் பூர்த்தி செய்கின்றன.
இளைஞர்களின் செயல்களை பாராட்டி, செலவு தொகையை அரசிடம் பெற்றுத் தருவதாக கூறிச் சென்ற அதிகாரிகள், தராமல் இழுத்தடிப்பதாகவும், அதிகாரிகள் ஒத்துழைத்தால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் எனவும் கூறினார்கள். பெற்றோர் தரும் பணத்தை வீண் செலவு செய்யாமலும், வாட்ஸ் அப் போன்ற சமூக வலை தளத்தை ஆக்கப் பூர்வமாகவும் பயன்படுத்திய இந்த இளைஞர்களின் செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
- மச்சராஜா