நடிகையின் பேச்சை நம்பி நடுத்தெருவில் மக்கள்..!
சென்னை மயிலாப்பூரில் உள்ள கே.எப்.ஜே நகைக்கடையில் கோல்டு பிளஸ் நகைச்சீட்டில் சேர்ந்து ஏமாந்த 50க்கும் மேற்பட்டோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர், அண்ணா நகர், புரசைவாக்கம், வளசரவாக்கம் ஆகிய இடங்களில் கே.எஃப்.ஜே ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த நகைக்கடைகள் மீது தான் நாளுக்கு நாள் மோசடி புகார்கள் குவிந்து வருகின்றன.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுஜித் செரியனை மேலாண் இயக்குனராகவும், அவரது மனைவி தான்யா, சகோதரர் சுனில் செரியன் ஆகியோரை இயக்குனர்களாகவும் கொண்ட இந்த கே.எப்.ஜே ஜுவல்லரியில் உள்ள அனைத்து நகைக்களையும் 32 கோடி ரூபாய் கடனுக்கு ஈடாக வங்கிகள் வாரிக்கொண்டு சென்றுவிட்டதால் தற்போது காலியான கடையும், கடை பாதுகாப்புக்கு செக்கியூரிட்டியும் தான் உள்ளனர். அதுவும் அண்ணா நகர் கடையில் செக்யூரிட்டி இறந்து போனதால் அந்த கடை இழுத்து பூட்டப்பட்டுவிட்டது.
கோல்டு பண்டு, கோல்டு லோன் பிளஸ், கோல்டு பிளஸ், டென்சன் ஃப்ரீ என்று விதவிதமாக பெயர் சூட்டி மக்களிடம் பழைய நகைகளையும் பணத்தையும் வாங்கிக் கொண்ட அந்நிறுவனம், முதிர்வு தேதியில் புதிய நகைகளையோ அல்லது கூடுதலாக தருவதாக சொன்ன நகைகளையோ கொடுக்க வில்லை. மாறாக நகைக்கு பதிலாக பணம் இல்லாத வங்கிக்கு காசோலைகளை கொடுத்து சமாளித்து வந்தனர். சுஜித், தான்யா ஜோடி..!
கே.எப்.ஜே கடைக்கு நகை வாங்க சென்றவர்களை விட கொடுத்த பணத்தையும் நகைகளையும் திரும்ப வாங்கச்சென்றவர்கள் தான் அதிகம். அந்த அளவிற்கு வாடிக்கையாளர்களை மயக்கும் விதமாக பேசி 3 மாதம் தவணை வாங்குவதில் இந்த கடையில் மேலாளர் திறமைசாலி என்கின்றனர் ஏமாந்த வாடிக்கையாளர்கள்.
மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மட்டும் இதுவரை 55 பேர் புகார் அளித்துள்ளனர். 77 லட்சம் ரூபாய் அளவிற்கு பண மோசடி நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதால் வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை இழந்து தவிப்பதாக பாதிப்புக்குள்ளான பலர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நகை மோசடியில் ஈடுபட்ட சுஜித், தான்யா, சுனில் ஆகியோர் அதிகாலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு நள்ளிரவில் ரகசியமாக வீட்டிற்கு வருவதால் தங்களால் பணத்தை திரும்ப பெற இயலவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.
சிலர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதை உண்மை என்று நம்பி நகைச்சீட்டில் சேர்ந்து தற்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாகவும் அடுத்ததாக மோசடி விளம்பரங்களில் நடித்தவர்களின் வீடுதேடிப் போக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த மோசடி பணத்தில் நுங்கம்பாக்கத்தில் பிரமாண்ட பங்களாவும், மயிலாப்பூரில் பிரமாண்ட வணிவளாகத்தையும் கட்டி ஜவுளிகடைக்கு வாடகைக்கு விட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டும் புகார்தாரர்கள், பெசன்ட் நகர் மற்றும் நுங்கம்பக்கத்தில் சுஜித் பர்க்கர் மேன் என்ற பெயரில் புதிதாக இரு கடைகள் தொடங்கி இருப்பதாகவும் சுஜித், தான்யா, சுனில் பெயரில் உள்ள சொத்துக்களை முடக்கி மோசடி பணத்தை மீட்டுக் கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சூரிகா