தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் உண்மை வெளிவருமா?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட அம்மாவட்ட மக்களைக் காவல்துறையினர் சுட்டுக் கொலைசெய்தனர். அதில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்டது. அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஒரு மாதத்துக்கு முன்னர், மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரிப்பதால் எந்தப் பலனும் இல்லை. அதுவும், மாநிலக் கட்டுப்பாட்டுக்குள் தான்வரும். எனவே, இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றப்படுகிறது. மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர்மீது தொடரப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு ரத்துசெய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.
அதன்பேரில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது தூத்துக்குடியில் பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யவுள்ளது.
மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றியதை அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் வரவேற்பதாக கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடியில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வந்தார்கள். அதன் ஒரு பகுதியாக மே 22 ஆம் தேதி நடைபெற்ற பொதுமக்களின் மாபெரும் பேரணியின்போது காவல்துறை கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியது.
போதிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஏதுமின்றி அதிரடியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 200 பேர் குண்டு காயங்களோடு மருத்துவமனையில் நீண்ட கால சிகிச்சை பெற்று வந்தனர். பலருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து மாற்றுத்திறனாளியாகி, இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து 28.5.2018 அன்று முறையான விசாரணை நடத்தி குற்றமிழைத்த போலீஸார் உட்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிபிஐக்கும், தமிழக அரசுக்கும் மனு அனுப்பப்பட்டது. சிலை கடத்தல் வழக்கு உட்பட பல வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிற தமிழக அரசு, 13 பேர் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முன்வராதது வன்மையாக கண்டனத்திற்குரியதாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் மூலம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை நீதிபதிகள் விசாரித்து தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தார்கள். கடந்த வாரம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை கடுமையாக கண்டித்ததுடன், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாகவும் உத்தரவிட்டுள்ளார்கள். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இது போராடிய மக்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட வெற்றியாகும்.
உடனடியாக சிபிஐ இந்த விசாரணையை மேற்கொண்டு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்களை வழக்கு விசாரணை முடியும் வரை பணி நீக்கம் செய்ய வேண்டும்” என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.