நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதருக்கு போலீசார் வலைவீச்சு !
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதி என்பவரது மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் லதா, தனது மகன் பிறந்தநாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்குள்ள முக்குறுணி விநாயகர் சன்னதியில் இருந்த தீட்சிதர் தர்ஷனிடம் தனது மகனின் பெயரை கூறி அர்ச்சனை செய்யுமாறு கூறிய லதா அவரிடம் தேங்காயை கொடுத்துள்ளார்.
ஆனால், லதாவின் மகனது பெயர், ராசி என எதையும் கேட்காமல் தேங்காயை மட்டும் வாங்கி சென்று உடைத்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அர்ச்சனை செய்யாமல் வெறும் தேங்காயை மட்டும் உடைத்து கொடுத்தது குறித்து தீட்சிதரிடம் லதா கேட்டதுடன் தேங்காயை உங்கள் கையால் வாங்கமாட்டேன் என கூறியதாகவும் தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆத்திரம் அடைந்த தீட்சிதர் தர்ஷன் லதாவை கண்ணத்தில் அறைந்ததால் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அப்போது சக பக்தர்கள் தீட்சிதரை தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, லதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் லதா அளித்த புகாரின் பேரில் தீட்சதர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான தர்ஷனை தேடி வருகின்றனர். கோயில் வளாகத்தில் அர்ச்சனை செய்ய சொன்ன பெண்னை தீட்சிதர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.