தமிழகம்

இளம் வயதில் பல்வேறு விருதுகள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இயங்கி வரும் கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் புரோஸ்கான் 1993 ஆம் ஆண்டு பரமக்குடி கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் செர்ந்தார். பரமக்குடியை சுற்றிலும் அதிகமான கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில மாவட்ட அளவில் இந்தப் பள்ளியின் மாணவ, மாணவிகள் தரவரிசைப் பட்டியலில் இடம் பெறுவது வழக்கம். இவர் இந்தப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் இருந்தே தான் படித்து பணிபுரியும் இந்தப் பள்ளிக்கு தன்னால் முடிந்த அளவுக்கு மாணவர்களுக்கு தரமான கல்வியையும் பள்ளிக்கு பெருமையையும் தேடித்தர வேண்டும் என்ற சிந்தனையோடு பணியாற்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் பொதுமக்களுக்கும் பயன்பெறும் வகையில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சேவை செய்து இருக்கிறார். பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே ஆராய்ச்சிப் படிப்பும் படித்து முடித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

இவரது ஆசிரியர் பணியை பாராட்டி தமிழக அரசு இவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்தது. இவ்வளவு இளம்வயதில் பல்வேறு விருதுகளை பெற்ற முனைவர் புரோஸ்கானுக்கு நாமும் அவரது அயராத உழைப்புக்கு வாழ்த்துக்களை கூறினோம்.

இதுகுறித்து புரோஸ்கான் நம்மிடம் கூறுகையில்,
நான் 1993 ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். அப்போது ஐந்தாண்டுகள் நிர்வாகம் வழங்கிய சம்பளத்தில் தான் பணியாற்றினேன். 1998 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பட்டதாரி அறிவியல் ஆசிரயராக பணிபுரிந்தேன். 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு வரலாறு முதுகலை ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறேன். எங்களது பள்ளியில் பெரும்பாலும் கிராமப்புறத்தில் இருந்து படிக்கும் மாணவர்கள் அதிகமானவர்கள் இருப்பதால் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மெல்லக் கற்போருக்கான கையேடு தயாரித்து மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்தியமைக்காக 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது எனக்கு கிடைத்தது. மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் துறை மூலமாக சர்க்கரை நோயை குணப்படுத்தும் தாவரங்களை ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை சமர்ப்பித்து வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.

நுகர்வோர் விழிப்புணர்வு சேவையில் 16 ஆண்டுகளில் மூன்று மாநில விருதுகளும், இரண்டு மாவட்ட விருதுகளும் பெற்றுள்ளேன். நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகிய புத்தகங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் வெளியிட்டுள்ளேன். கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன் என்றார்.

சமீப காலங்களில் ஆசிரியர்களின் அட்டூழியம் தொடர்ந்து செய்திகளாக வந்து கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில் ஆசிரியப் பணியை அறப்பணியாக செய்யும் புரோஸ்கான் போன்றோர்களால் தான் தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரம் குறையாமல் இருக்கிறது என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்.

  • ராஜா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button