டாக்டரிடம் செல்போனில் கேட்டு சிகிச்சை அளித்த செவிலியர்கள் தஞ்சையில் இரட்டை சிசுக்கள் உயிரிழப்பு!
சென்னையில் இருந்து மருத்துவர் செல்போனில் சொன்ன அறிவுரைகளை கேட்டு, தஞ்சை தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு, நர்சு சிகிச்சை அளித்ததால், கர்ப்பிணியின் வயிற்றில் வளர்ந்த இரட்டை சிசுக்கள் பலியானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 5 வருட காத்திருப்பின் பலனாக தங்கள் குடும்பத்திற்கு இரட்டை வாரிசு வரபோகிறது என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமானது…
தஞ்சை மாவட்டம், பூண்டி கல்லூரி சாலையில் வசித்து வருபவர்கள் குமரவேல் – விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்களாக குழந்தை இல்லை என்ற நிலையில், தஞ்சை அபி அண்ட் அபி மருத்துவமனையின் மருத்துவர் ராதிகா ராணியின் சிகிச்சையால் விஜயலட்சுமி கர்ப்பமானதாக கூறப்படுகிறது.
பல லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி கடந்த 5 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், விஜயலெட்சுமியின் வயிற்றில் இரட்டை சிசுக்கள் வளர்வதாகக் கேள்விப்பட்ட குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் விஜயலெட்சுமிக்கு திடீரென இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது.
பிரசவத்திற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் இடுப்பு வலி ஏற்பட்டதால் அபி அண்ட் அபி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர் ராதிகாராணி விஜயலெட்சுமியை பரிசோதித்து விட்டு. குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், இருப்பினும் சிகிச்சைக்கு அனுமதிக்கும்படியும் அறிவுரை வழங்கி உள்ளார்.
விஜயலெட்சுமியை சிகிச்சைக்காக அனுமதிக்க கூறிவிட்டு மருத்துவர் ராதிகா ராணி சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. அப்போது, வலி தாங்க இயலாமல் தவித்த விஜய லெட்சுமிக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர்கள் திணறிபோயுள்ளனர்.
ஒரு கட்டத்தில் மருத்துவர் ராதிகா ராணி செல்போனில் சொல்கிறபடி செவிலியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் விஜயலெட்சுமியின் நிலை என்ன என்பதை நேரில் பார்க்காமல் மருத்துவம் சொன்னதாலோ என்னவோ வலி கட்டுப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இதையடுத்து விஜயலெட்சுமியின் பனிக்குடம் உடைந்ததால், தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தான நிலை உருவானதாக கூறப்படுகின்றது. அவசர அவசரமாக ஆபரேசன் தியேட்டருக்கு விஜயலெட்சுமியின் மாமியார் கொண்டு சென்றுள்ளார். அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் எவரும் இல்லாததால் விஜயலெட்சுமி கடும் தவிப்புக்குள்ளாகியுள்ளார்.
இந்த நிலையில் ராதிகாராணி, தனக்கு தெரிந்த மற்றொரு மருத்துவரை தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்க கூறியுள்ளார். அவர் வந்து சோதித்து பார்த்த போது விஜயலெட்சுமியின் வயிற்றில் வளர்ந்த 5 மாத இரட்டை சிசுக்கள் இரண்டும் உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக அந்த இரு சிசுக்களையும் கர்ப்பப்பையில் இருந்து அகற்றி விஜயலெட்சுமியை காப்பாற்றியுள்ளார் அந்த மருத்துவர். இருந்தாலும் மருத்துவர் ராதிகா ராணியின் அலட்சியமான பொறுப்பற்ற செயலால் 5 வருடங்கள் கழித்து தங்கள் குடும்பத்திற்கு கிடைக்க இருந்த வாரிசுகள் இரண்டும் பலியானதாக குற்றஞ்சாட்டுகிறார் மாமனார் ராமச்சந்திரன்.
இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் பெற அபி அண்ட் அபி மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் எந்த ஒரு பதிலும் அளிக்க மறுத்துவிட்டனர்.
மருத்துவம் சேவையாக இருந்த வரை அனைத்தும் உயிராக பார்க்கப்பட்டது, எப்போது பணத்திற்கானதாக மாற்றப்பட்டதோ அன்றே உயிர்கள் அனைத்தும் கேசாகவும், எண்களாகவும் மட்டுமே பார்க்கப்படுகின்றது என்று சுட்டிகாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
& மு.சரவணக்குமார்