சவுடு மணல் அள்ளப்படுவதாக புகார் -: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சவுடு, களிமண் எடுக்க தடை விதிக்கக்கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த சுடலைக்கண்ணு தொடர்ந்த வழக்கில், ஏரல், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் உள்ள தனியார் பட்டா நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் தனியார் செங்கல் சூளைக்காக அதிகளவில் சவுடு, களிமண்கள் அள்ளப்படுவதுடன், அதிகமாக ஆற்று நீரும் உறிஞ்சப்படுகிறது.
இதனால், அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், மண் வளமும் சூறையாடப்படுவதாக முறையிட்ட மனுதாரர், இதனை வருவாய் துறையினரோ, கிராம நிர்வாக அலுவலர்களோ கண்டு கொள்வதில்லை என்றும் இதனால், ஏரல், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் செயல்படும் களிமண், சவுடு மணல் குவாரிகளுக்கு தடைவிதிக்கவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தவிட்டு, விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.