மின் கோபுர உச்சியில் தந்தை தற்கொலை முயற்சி.. கண்ணீருடன் கதறிய மகள் .! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
சிவகங்கை அகதிகள் முகாமில், மனைவி தாக்கியதால் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்ற போதை ஆசாமியை 3 மணி நேரம் போராடி தீயணைப்புதுறையினர் பத்திரமாக மீட்டனர்.
சிவகங்கையை அடுத்துள்ள ஒக்கூர் அகதிகள் முகாமில் வசித்துவரும் ஜீவா என்ற குடிமகன் தன் மனைவி அடித்து விட்டதாக கூறி முன்கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
தென்றல் நகர் பகுதியைசேர்ந்த கணவனை இழந்த பெண் முத்துலெட்சுமி, இவருக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்தஆண்டு அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த ஜீவா என்பவரை முத்து லெட்சுமி மறுமணம் செய்துகொண்டுள்ளார்.
அண்மை காலமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஜீவா தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவி மற்றும் குழந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளார். இருந்தாலும் தனது வளர்ப்பு தந்தை மீது அந்த பெண் குழந்தை பாசமாக இருந்தது. இந்த நிலையில் குடிபோதையில் வந்த ஜீவா மனைவியை அடித்து உதைத்துள்ளார்.
இதனை தட்டிக்கேட்டபக்கத்து வீட்டுகாரரிடமும் தகராறு செய்ய, முத்துலெட்சுமியும், பக்கத்து வீட்டுக்காரர்களும்சரமாரியாக தாக்கியுள்ளனர். அடிதாங்க முடியாமல் தப்பிச்சென்ற ஜீவா அருகில் உள்ள உயர்அழுத்த மின்சார கோபுரத்தில் ஏறியுள்ளார்.
உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுக்கடைகள் எல்லாம் அடைத்திருக்க மது எப்படி கிடைத்தது என்ற கேள்வியுடன் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து அந்த உயர்கோபுரத்தில் செல்லும் மின்கம்பிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஜீவாவிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஒலிப்பெருக்கி மூலம் உறுதி அளித்தும் இறங்கி வர மறுத்து அடம்பிடித்தார் ஜீவா.
தனது தந்தை கீழே இறங்கிவர அவரது வளர்ப்பு மகள் உருக்கமாக கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தும், தலைகேறிய போதையால் கீழே வர விரும்பாமல் தொடர்ந்து ஜீவா அடம்பிடித்துக் கொண்டிருந்தார்.
இருள் சூழ்ந்த நிலையிலும் இறங்க மறுத்த அந்த குடிமகனை, தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மேலே ஏறி இருகப்பிடித்து பத்திரமாக மீட்டு வந்தனர்.
போதையில் இருந்த ஜீவா, தாசில்தாரின் காலில் விழுந்து தன்னை சாகடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவருக்கு ஆறுதல் கூறி தேற்றிய தாசில்தார், ஜீவாவுக்கு தேவையான முதல் உதவி வழங்க அறிவுறுத்தினார்.
ஊரே கொரோனா பீதியில் தவித்திருக்க திருட்டு தனமாக போதையை ஏற்றிக் கொண்டதோடு, மின் கோபுரத்தில் ஏறி 3 மணி நேரம் போலீசாரை படாதபாடு படுத்தி எடுத்திய ஜீவாவை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
போதை எப்போதும் சமூக அமைதியை கெடுக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
கொரோனா வழிப்பறிவழுக்கி விழுந்த போலி காவலர்..! மாவுக்கட்டு பரிதாபங்கள்
சிவகங்கையில் ஊரடங்கை மதிக்காமல் வாகனத்தில் செல்வோரை மறித்து போலீஸ் என கூறி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த போலி காவலர் கைது செய்யப்பட்டார். நிஜபோலீசிடம் தப்ப முயன்று கை ஒடிந்தவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டது.
சிவகங்கையை அடுத்துள்ளகூட்டுறவு பட்டி கிராமத்தை சேர்ந்த அருண்பிரகாஷ் என்பவர் தான் காவல்துறையினருக்கு போட்டியாகவாகன சோதனைக்கு களம் இறங்கி கையை முறித்துக்கொண்டார்..!
பல்சர் அருண்பிரகாஷ் மீது கொலை, கற்பழிப்பு, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தனது பல்சர் வாகனத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டி, வாகன சோதனையில் களமிறங்கி உள்ளார்.
கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்ததுடன் மக்கள் யாரும் வெளியில் அதிகம் வரவேண்டாம் என்றும், அவ்வாறு வருபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துவருவதையும் அறிந்த அருண்பிரகாஷ், காவல்துறையினர் இல்லாத பகுதிகளில் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து அடாவடி வசூலில் இறங்கியதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் பெருமாள்பட்டி விளக்கருகே வெள்ளலூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணனை மறித்து விதியை மீறி வெளியில் வந்ததாக கூறி அவரிடமிருந்த 7 ஆயிரத்து 750 ரூபாயையும், இளையராஜா என்பவரிடம் செல்போன் ஒன்றையும் பறித்து சென்றதாக கூறப்படுகின்றது.
காய்கறி வியாபாரத்திற்கு சென்ற அன்னம்மாள் என்கிற பெண்ணிடம், விதியை மீறி வியாபாரம் செய்யவந்ததால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாக மிரட்டி 5 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டதுடன், தன்னை மதகுபட்டி காவல்நிலையத்தில் வந்து பார்க்க வேண்டும் எனவும் கூறிசென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து பணம் மற்றும் பொருளை இழந்தவர்கள் அவர் கூறிய காவல்நிலையத்திற்கு சென்று விசாரித்ததில் அப்படி யாரும் இல்லை என்பது தெரியவந்தது. தங்களுக்கு போட்டியாக வாகன சோதனைக்கு தனிக் கிளை தொடங்கிய கேடியைப் பிடிக்க களம் இறங்கியது காவல்துறை.
வழிப்பறி செய்தவரின் பைக்கிற்கு 7767 என்று நம்பர் உள்ளதாக போலீசில் போட்டு கொடுக்க சிக்கினார் பல்சர் அருண்பிரகாஷ். திருமலை அருகே அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்த போது, இருசக்கர வாகனத்தில் சுற்றி சுழன்று தப்ப முயன்று… கீழே விழுந்த வேகத்தில் அருண்பிரகாஷின் இடது கையில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
தங்கள் பெயரை சொல்லி பணம் பறித்த வழிப்பறி கொள்ளையனாக இருந்தாலும் அவனை மனித நேயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று மாவுக்கட்டுபோட்டு விட்டனர் நிஜ போலீசார்..!
ஊரடங்கு நேரத்தில் ஊருக்கு மட்டுமல்ல, போலீசுக்கும் அடங்காமல் அட்டகாசம் செய்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!