மருத்துவர்களின் அலட்சியம் : காதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன்
சென்னையில் 9 வயது சிறுமிக்கு காதில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்குப் பதில் மருத்துவர்களின் அலட்சியத்தால் தொண்டையில் சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரின் மகள் ராஜஸ்ரீ (9). வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். ராஜஸ்ரீக்கு காதில் கம்மல் போடும் இடத்தில் கட்டி வந்துள்ளது. இதனை சரி செய்ய அரசு உதவிபெறும் மருத்துவமனையான அம்பத்தூர் ஸ்டெட்போர்டு மருத்துவமனையை அணுகியுள்ளார் செல்வம். அங்கு சிகிச்சை பெற்றுவந்த ராஜஸ்ரீக்கு, காதில் இருக்கும் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்காக ராஜஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ சோதனைகள் முடிந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தால் காதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்த சிறுமியை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் பெற்றோர், உறவினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். வேறு ஒரு சிறுவனுக்கு செய்ய வேண்டிய ட்ரான்சில் கட்டி அறுவை சிகிச்சையை, சிறுமிக்கு செய்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர். பெற்றோர் தரப்பு கூறும் போது, சிறுமிக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து ட்ரான்சில் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் சிறுமிக்கு தொண்டையில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தங்களுக்கு உரிய நிதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பெற்றோருக்கு இழப்பீடு வழங்க மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், ஏராளமானோர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருவாலங்காடு, திருத்தணி பகுதிகளை சேர்ந்த பச்சிலங்குழந்தை, சிறுமி உட்பட 4 பேர் இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
குறிப்பாக திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் கிராமமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால், கிராம பகுதியில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்கள், மருந்துகடை வியாபாரிகளிடம் சென்று சிகிச்சை பெறுவதால் காய்ச்சல் தீவிரமடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
இது குறித்து சுகாதாரத் துறைக்கு வந்த புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட சுகாதரப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் தயாளன் தலைமையில் போலி மருத்துவர்களை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தினர். இதில் ஒரு பகுதியாக டாக்டர் தயா சாந்தி தலைமையில் மருத்துவ குழுவினர் பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில் சோதனையிட்ட போது, பூபாலன் (45) என்பவர் பி.எஸ்.சி படித்து விட்டு கடந்த சில ஆண்டுகளாக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அவரை மருத்துவ குழுவினர் போலீசாரிடன் ஒப்படைத்தனர். பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மருத்துவர் பூபாலன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூண்டியில், மருத்துவம் படிக்காமல், சிகிச்சை அளித்து வந்த ஷோபனா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமம், பூண்டியில் கடந்த சில ஆண்டுகளாக, மருத்துவம் படிக்காமல் பெண் ஒருவர் சிகிச்சை அளித்து வருவதாக, மாவட்ட மருத்துவத்துறைக்கு புகார் வந்தது. இதை அடுத்து, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலாஜி தலைமையில் மருத்துவர்கள் அடங்கிய குழு, பூண்டி கிராமத்திற்கு சென்று, குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது ஷோபனா என்ற பெண்மணி மருத்துவம் படிக்காமல், பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- நமது நிருபர்