5 மாதத்தில் ரூ.20 கோடி லஞ்சம்
நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி!
தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், நிறுவனங்கள் மற்றும் அவரது உதவியாளர் வீடுகளில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந் தேதி ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலும் இந்த சோதனை நடந்தது. அப்போது ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினார்கள்.
இலுப்பூரில் நடந்த சோதனையின் போது, கணக்கில் வராத ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் வருமான வரித்துறை விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை தொடர்பாக தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் கூறப்பட்டது. அந்த கடிதம் தற்போது ரகசியமாக வெளியாகி உள்ளது. அதில், 7.4.2017-ல் விஜய பாஸ்கரின் புதுக்கோட்டை இலுப்பூர் வீட்டில் நடந்த சோதனை நடந்த போது, 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், ரூ.12 லட்சத்து 96 ஆயிரம் தனித்தனி கவர்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன.
இந்த ரூ.12 லட்சத்துக்கு கணக்கு காட்டப்படவில்லை. அந்த பணத்தை சத்துணவு பணியாளர் வேலைக்காக லஞ்சமாக பெற்றதாக கூறினார்கள்.
இதை விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி ஒத்துக் கொண்டார். மேலும் 5 மாத காலத்தில் மட்டும் பல்வேறு விதங்களில் ரூ.20 கோடியே 75 லட்சம் வசூலித்து இருக்கிறார்கள்.
விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் வீட்டில் சோதனை நடந்த போது, அதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே, அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தமிழக அரசுக்கு இந்த கடிதம் அனுப்பப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் வந்திருப்பதை தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒத்துக்கொண்டார். அந்த கடிதம் தற்போது லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புதுறை டைரக்டருக்கு அனுப்பி இருப்பதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் நடப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்ட போது, விஜய பாஸ்கரின் வீடுகளில் சோதனை நடந்த போது, ரூ.20 கோடி வரை பணம் மற்றும் அதற்கான ஆவணங்களை கைப்பற்றினோம்.
விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. சின்னத்தம்பி பணம் பெற்றதை ஒத்துக் கொண்டுள்ளார். இது சம்பந்தமான அனைத்து கட்ட விசாரணைகளும் 2 மாதத்துக்கு முன்பு முடிந்தது. இதையடுத்து இதற்கான அறிக்கையை அரசுக்கு அனுப்பி இருகிறோம் என்று கூறினார்.
ஆனால், விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி இது பற்றி கூறும் போது. எங்களிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத எந்த பணத்தையும் வருமான வரித்துறையினர் கைப்பற்ற வில்லை.
மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சோதனையின் போது நான் எந்த வாக்குமூலமும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கொடுக்க வில்லை. நாங்கள் பணம் பெற்றதாக கூறப்படுவது தவறான தகவல். எங்களை பற்றி யாரோ திட்டமிட்டு இதுபோன்ற தகவல்களை பரப்புகிறார்கள் என்று கூறினார்.
அமைச்சர் விஜய பாஸ்கரிடம் கேட்ட போது, எனது வீடு மற்றும் குடும்பத்தினர் வீடு போன்றவற்றில் சோதனை நடத்திய போது, சட்ட விரோதமாக எந்த பணமும், ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை.
வருமான வரித்துறையின் அறிக்கை என்ற பெயரில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபற்றி என்ன சொல்வது? என்பது தெரியவில்லை.
ஆனால், நான் எந்த தவறும் செய்யவில்லை. சட்ட ரீதியாக இதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
மு.க. ஸ்டாலின் எதிர்க் கட்சி தலைவர் என்ற முறையில் என் மீதும், அ.தி.மு.க. அரசு மீதும் குறை கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் என்று கூறினார்.
விஜயபாஸ்கர் ஏற்கனவே குட்கா ஊழல் உள்ளிட்ட பல விஷயங்களில் சிக்கி இருக்கிறார். இப்போது அவர் சத்துணவு ஊழியர் நியமனத்தில் பணம் வாங்கியதாக அவரது தந்தையே ஒத்துக் கொண்டதாக வருமான வரித் துறை அறிக்கை கூறுகிறது. அதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே, அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதேபோல் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் விஜயபாஸ்கர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.
விஜயபாஸ்கர் மீதான ஊழலுக்கு ஆதாரங்கள் இருப்பதாக வருமான வரித்துறை கூறி இருப்பதுடன், இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வருமான வரித்துறை கடிதம் எழுதி இருப்பதால் விஜயபாஸ்கருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது, விஜயபாஸ்கருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.