தமிழகம்

என்னது 20 ஆயிரமா ?கண்ணீர் சிந்தும் இளநீர் கடை வியாபாரி ! திருப்பூர் அருகே நடந்தது என்ன ?

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே மங்கலம் சாலையில் பை பாஸ் ரவுண்டானா அருகே உள்ள சாலை ஓர இளநீர் கடையில் இளநீர் குடிக்க சென்ற ஒருவர் கடையில் ரசீது ஒன்று இருப்பதை கண்டு பார்த்ததாகவும், அதில் இளநீர் கடை நடத்த உரிமை கட்டணமாக ரூ. 20 ஆயிரம் ஊராட்சி நிர்வாகம் வசூல் செய்ததற்கான ரசீது என தெரிந்ததையடுத்து சமூக எண்ணம் கொண்ட ஆர்வலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நியாயமா? என கேட்டிருந்தார். மின்னல் வேகத்தில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது வாடகைக்கு இடம் பிடித்து ஓலை கூரை வேய்ந்து சிறிய அளவில் இளநீர் கடை அமைந்திருந்தது.

அங்கு சென்று விசாரித்த போது ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்த ராமசாமி(58) மற்றும் அவரது மனைவி அமிர்தா (55) ஆகியோர் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். ராமசாமி கேரளாவில் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் கட்ந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாளவாடி, கடம்பூர் ஆகிய பகுதிகளுக்கு தனது மனைவி மற்றும் மகனுடன் சென்று மரம் ஏறி இளநீர் பறித்து லாரியில் ஏற்றி வந்து ஆட்டையம்பாளையம் மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் இறக்கிவிட்டு பின்னர் மங்கலம் சாலையில் உள்ள கடைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையான இளநீரை இறக்கி வைத்துவிட்டு விற்பனை செய்வது வழக்கம்.

இந்நிலையில் ஆண்டுக்கு முதலில் ரூ. 1500 என வசூலித்து வந்த வேலாயுதம்பாளையம் ஊராட்சி இந்தாண்டு ரூ. 20 ஆயிரம் உரிமைக்கட்டணமாக வசூலித்திருக்கிறது. மேலும் நெடுஞ்சாலை ஓரமாக மரத்தடியில் உள்ள இளநீர் கடைக்கு, கரும்புச்சாறு கடை என கடைகள் ஏலம் விட்டு இது போன்று வசூலில் வேலாயுதம்பாளையம் ஊராட்சி இறங்கியுள்ளது. இளநீர் கடைக்கு ரூ. 20 ஆயிரமா? அதுவும் வாடகை இடத்தில் இயங்கும் கடைக்கு ஏலம் விடுவதற்கு ஊராட்சிக்கு அதிகாரம் இருக்கிறதா? நெடுஞ்சாலை ஓரத்தில் மரத்தடியில் அப்பாவிகள் செய்யும் இளநீர் வியாபாரத்திற்கு இந்த அளவு தொகை வசூலிக்கலாமா ? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேலாயுதம்பாளையம் ஊராட்சி செயலாளர் பரமேஷ்வரனிடம் செல்போனில் கேட்டபோது ஊராட்சி இடத்தில் கடை நடத்தினால் உரிமை கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், மேற்படி சாலை ஓரங்களில் கடை நடத்துபவர்கள் வேறு இடத்தை காட்டி இங்கு வந்து வியாபாரம் செய்வதாக கூறினார்.

மேலும் வாடகை இடத்திற்கு இது பொருந்துமா என கேட்டதற்கு தலைவரை கேட்டுக்கொள்ளுங்கள் என கூறினார். மரம் ஏறி பிழைப்பு நடத்தும் கூலி தொழிலாளி இளநீரை பறித்து முதுமையிலும் குடும்பாதாருடன் விற்று வேர்வை சிந்தி சம்பாதிக்கும் பணம் கால் வயிறு கஞ்சி குடிக்கவே போதாத நிலையில் ஆண்டு தோறும் சம்பாதிப்பதில் பாதியை ஊராட்சிக்கு செலுத்திவிட்டால் எப்போது முன்னேற முடியும். பலரின் தாகத்தை தணிக்கும் இளநீர் வியாபாரத்தின் மீது போடப்பட்டிருக்கும் அபரீதமான உரிமை தொகை விதிப்பை குறைத்து உழைக்கும் வர்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிற்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button