ஆக்சிஸ் வங்கி ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி சாலையில் அண்ணா நகர் பகுதியில் டயர் ஷோரூம் நடத்தி வருபவர் பூபதி. கார் மெக்கானிக்காக வாழ்க்கையை துவங்கி கடும் உழைப்பினால் படிப்படியாக உயர்ந்து டயர் ஷோரூம் துவங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறார். இந்நிலையில் தனது தொழிலை மேலும் விரிவுபடுத்த எண்ணி தான் கணக்கு வைத்திருக்கும் ஆக்சிஸ் வங்கியின் பல்லடம் கிளையை அணுகியுள்ளார்.
இந்நிலையில் பூபதியின் கடன் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த வங்கி நிர்வாகம் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ. 8 லட்சம் கடனாக வழங்கியுள்ளது. 36 மாதத்தவணையாக மாத மாதம் ரூ. 28,922 ஐ செலுத்த உத்தரவிட்டிருந்தது. முதல் இரண்டு தவணைகள் முறையாக செலுத்திவந்த நிலையில் மூன்றாவது மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் பூபதியின் வங்கி கணக்கில் போதிய பணம் இருந்தும் தவணை தொகையை வங்கி நிர்வாகம் வரவு வைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென இந்தாண்டு ஜனவரி மாதம் பூபதியின் 36 தவணை காலத்தை 41 ஆக மாற்றி இருப்பதாக வங்கி நிர்வாகம் மூலமாக தெரிந்துகொண்டார். இந்நிலையில் இது குறித்து வங்கி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது உரிய விளக்கம் அளிக்கவில்லை. மேலும் கொரானா காலகட்டத்தை காரணம் காட்டியுள்ளது. இதனை அடுத்து உரிய விளக்கம் அளிக்காத வங்கி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு பூபதி கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் வங்கி தரப்பில் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் வழக்கறிஞர்கள் யுவராஜ் மற்றும் பொன்னம்பலம் மூலமாக திருப்பூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு ஆணையத்தின் தலைவர் திருமதி S.தீபா மற்றும் உறுப்பினர்கள் S.பாஸ்கர், V.ராஜேந்திரன் முன்னிலையில் பல கட்டமாக விசாரணை நடைபெற்றது. இறுதியாக கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையாளர் பூபதிக்கு கூடுதல் வட்டி கணகீடு செய்யப்பட்டதாலும், மன உளைச்சலுக்காகவும் ரூ. 1 லட்சம் இழப்பீடு இரண்டு மாத காலத்திற்குள் உத்தரவிடப்பட்டிருந்தது. தவறும் பட்சத்தில் 8% வட்டியுடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர் பூபதி நேர்மையாக தொழில் செய்து வாழ்க்கையில் உழைப்பினால் முன்னேறி வங்கி கணக்கை முறையாக பராமரித்து வந்தவருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பு பூபதியின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.