கடமலை – மயிலை ஒன்றியத்தில் தொடரும் காட்டுத்தீ
பணியாளர் பற்றாக்குறையால் பறிபோகும் வனக்காடுகள்
கடமலை- மயிலை ஒன்றியத்தில் உள்ள 3 வனச்சரகங்களில் போதிய பணியாளர்கள் இல்லாததால், காட்டுத்தீயால் வனப்பகுதி அழிந்து வருகிறது. அத்துடன் மான், மரக்கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம், கடமலை – மயிலை ஒன்றியத்தில் 41 ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி மேகமலை, கண்டமனூர், வருசநாடு ஆகிய மூன்று வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு வனத்துறையினர் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த வனப்பகுதிகளைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அத்துடன் வனப்பகுதிக்குள் அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் உள்ளிட்ட ஏராளமான மலைக்கிராமங்களும் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராமளான வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மூன்று வனச்சரகங்களிலும் வனத்துறையினர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளது. வருசநாடு வனச்சரகத்தில் 26 வனத்துறையினர் பணியாற்ற வேண்டிய நிலையில் தற்போது வனச்சரகர் உட்பட 10 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதேபோல கண்டமனூர் வனச்சரகத்தில் 13, மேகமலை வனச்சரகத்தில் 10 வனத்துறையினர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கண்டமனூர், மேகமலை ஆகிய இரண்டு வனச்சரங்களுக்கும் ஒரே ஒரு வனச்சரகர் மட்டும் பணியாற்றி வருகிறார். இதனால் வனப்பகுதியை வனத்துறையினர் பாதுகாக்க முடியவில்லை. இதனால் வனக்குற்றங்கள் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. மான் வேட்டை, மரக்கடத்தல் உள்ளிட்ட வனக்குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வனத்துறையில் பணியிடங்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தற்போது உள்ள வனவர், வனக்காவலர் உள்ளிட்டவர்கள் கூடுதலாக வனப்பகுதியை கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக கடமலை – மயிலை ஒன்றியத்தில் போதிய அளவில் மழையில்லை. எனவே, பெரும்பாலான மாதங்கள் வனப்பகுதியில் உள்ள மரங்கள், புற்கள் ஆகியவை காய்ந்த நிலையில் காணப்படும்.
வனப்பகுதியை சுற்றிலும் கிராமங்களுக்கு செல்லுவதற்காக சாலை அமைந்துள்ளது. எனவே வனப்பகுதியில் அவ்வபோது மர்மநபர்களால் தீ விபத்து ஏற்படுகிறது. வனத்துறையில் பணியாளர்கள் இல்லாததால் தீ விபத்து ஏற்படும் நேரங்களில் அதனை அணைக்க மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றப்பட்ட நிலையில் வனச்சரகங்களில் தீயை அணைக்க உபகரண வசதிகள் இல்லை. எனவே, தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பதற்குள் ஏராளமான மரங்கள் தீயில் கருகி விடுகிறது.
இதுகுறித்து கொம்புக்காரன்புலியூர் கிராமத்தை சேர்ந்த பாலு கூறுகையில்,கடமலை- மயிலை ஒன்றிய வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கு முன்பு 3 வனச்சரக அலுவலகங்களிலும் பணியாளர்கள் பற்றாக்குறை இல்லாமல் காணப்பட்டது. ஆனால், தற்போது 3 வனச்சரகங்களிலும் வனத்துறையினர் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது.
இதனால் தற்போது பணியாற்றும் வனத்துறை பணியாளர்கள் வனக்குற்றங்கள் நடைபெறுவதை முழுமையாக தடுக்க முடியவில்லை. பணிச்சுமை காரணமாக தற்போது பணியாற்றும் வனத்துறையில் வேறு பகுதிக்கு சென்றுவிடும் மனநிலையில் உள்ளனர். எனவே, மாவட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து 3 வனச்சரகங்களிலும் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்’ என தெரிவித்தார். கர்ணன் கூறுகையில்,
தங்கம்மாள்புரம் அருகே உள்ள பஞ்சம்தாங்கி உள்ளிட்ட சில மலைப்பகுதிகளில் மர்மநபர்களால் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. தீயை அணைக்க வனத்துறையினரிடம் போதிய அளவில் உபகரணங்கள் இல்லை. தற்போது வரை தீவிபத்து ஏற்பட்டால் மரக்கிளைகளை வைத்து வனத்துறையினர் தீயை அணைத்து வருகின்றனர்.
இதனால் தீயை அணைக்க நீண்ட நேரமாவதுடன் ஏராளமான மரங்கள் தீயில் கருகி விடுகிறது. வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தினால் வனப்பகுதியில் காட்டுத்தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்படும். ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக வனப்பகுதியை முழுமையாக பாதுகாக்க முடியவில்லை. எனவே, வனத்துறையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடுதல், புதிய தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வனத்தை மேம்படுத்த வேண்டும்’ என்று கூறினார்.
– கே.ஜெய்லானி