உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது !
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை, ஆனந்தூர், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் தொடர் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றும் பெண் ஒருவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. தொண்டியைச் சேர்ந்த இவர் மாற்றுப்பணிக்காக ராமநாதபுரம், உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்டார். கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காகப் பல்வேறு இடங்களுக்கு சக பணியாளர்களுடன் ஒரே வாகனத்தில் பயணித்தார்.
அவரது இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இவருக்கு கொரோனோ நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் பணியாற்றிய உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. அங்கு நோய்க் கிருமிகள் பரவாமல் இருக்க கிருமி நாசினியால் சுகாதாரத்துறையினர் சுத்தம் செய்தனர். இவருடன் பணிக்குச் சென்றவர்கள், வாகனத்தில் பயணித்தவர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியவர்கள் உள்ளிட்டோருக்கு நோய்த் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- ராமநாதபுரம் அ.நூருல்அமீன்.