தமிழகம்

நண்டு மோசடி… -: ரூபாய் ஒன்றே கால் கோடி சுருட்டல்

சேலத்தில் நண்டு வளர்ப்புதொழிலில் முதலீடு செய்தால் லட்சகணக்கில் பணம் கொட்டும் என்று ஆசைவார்த்தை கூறி ஏராளமானவர்களிடம் முதலீடுகளை பெற்று ஒன்றே கால் கோடி ரூபாயை சுருட்டியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவர் எம்.எல்.எம் முறையில் முதலீடுகள் பெற்று நண்டு வளர்ப்புத் தொழிலில் முதலீடு செய்து பெரும் தொகை திருப்பித்தருவதாக விளம்பரம் செய்துள்ளார்.

இதற்காக இணையதளம் ஒன்றைத் தொடங்கி, தனக்குப் பல்வேறு நாடுகளில் பண்ணைகள் இருப்பது போலவும் அதில் நண்டுகள், இறால்கள் வளர்ப்பது போலவும் வண்ணமயமான புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த பீதாம்பரம் என்பவர் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அவருக்கு சில நாட்கள் கழித்து சில ஆயிரங்களை திருப்பிக் கொடுத்து ஆசையை தூண்டியுள்ளனர்.

இதில் மகிழ்ச்சியடைந்த பீதாம்பரத்தை மீண்டும் மூளைச்சலவை செய்துள்ளனர். அதாவது, “இந்த சில ஆயிரம் ரூபாய் லாபம் அடுத்த முறை சில லட்சங்களாக மாறும், அதற்கு உங்களது உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில் நண்டு வர்த்தகம் குறித்து விளக்கி அவர்களையும் இதில் இணையுங்கள். அதன் மூலம் உங்களுக்கு கமிஷன் தொகை கிடைக்கும்” என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். அவர்களது பேச்சில் மயங்கிய, பீதாம்பரம் தனது நண்பர்கள், உறவுகள் வட்டத்தையும் “யூனிடாப் குளோபல் ஹோல்டிங் லிமிடெட்” நிறுவனத்தின் நண்டு வர்த்தகத்தில் கோர்த்துவிட்டுள்ளார்.

அந்த வகையில் ஒரு கோடியே 25 லட்ச ரூபாயை முதலீடாக பீதாம்பரமும் அவரது உறவினர்கள், நண்பர்களும் லட்சுமணனின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அதன் பிறகு நாட்கள் மாதங்களாகக் கடந்திருக்கிறது. முதலீட்டுப் பணத்தையும் கொடுக்காமல் லாபத்தையும் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர்.

திடீரென ஒரு நாள் இயற்கை சீற்றம் காரணமாக தொழிலில் நட்டம் ஏற்பட்டுவிட்டது என்று முதலீடு செய்தவர்களிடம் கையை விரித்திருக்கிறது லட்சுமணனின் நண்டு வளர்ப்பு கும்பல். இதனையடுத்து சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மாநகரக் காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சென்னை வந்த தனிப்படை போலீசார், “ஆக்குவாநோமியா ஆகுவாகல்ச்சர் ட்ரூ இண்டியா” என்ற மோசடி நிறுவனத்தின் நிறுவனர் நண்டு லட்சுமணன், அதில் முக்கிய பொறுப்புகள் வகித்த சரவணன் என்கிற சாகுல் ஹமீது, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த உமாபதி, திருவண்ணாமலையைச் சேர்ந்த செல்வவிநாயகம், சந்திர சேகரன் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கோடியே 98 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆவணங்களையும் கைப்பற்றினர்.

“படுத்துக்கொண்டே பல லட்சங்களை சம்பாதிக்கலாம்” என்கிற ரீதியில் ஆசைகாட்டும் லட்சக் கணக்கான மோசடி வலைதளங்கள் இணையத்தைத் திறந்தால் வரிசைகட்டி நிற்கும். அவற்றின் வண்ணமயமான வீடியோக்களை பார்த்து மயங்கி பணத்தை முதலீடு செய்தால், கையில் உள்ளதும் போகும் நிலை வரும். எனவே எந்த ஒரு ஆன்லைன் நிறுவனத்திலும் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் அவற்றின் பின்னணியை பலகட்டங்களாக ஆராய வேண்டியது அவசியம் என்கின்றனர் காவல் துறையினர்.

& முத்துப்பாண்டி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button