குடிபோதையில் பெண்ணை துரத்திய காவலர்… : சுற்றிவளைத்த பொதுமக்கள்..!
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் அருகே குடிபோதையில் பெண்ணை துரத்திச் சென்ற தலைமைக் காவலரை மது பாட்டிலுடன் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில், தலைமைக் காவலர் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள வன்னியன் கோவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அத்திப்பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை கடந்து செல்லும்போது பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர் பிரபாகரன் மோட்டார் சைக்கிளில் தன்னை பின்தொடர்ந்து வருவதை அந்தப் பெண் பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். எனினும், அவரின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்று, தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திய காவலர் பிரபாகர், எங்கே செல்கிறீர்கள்? நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்கள் கண்கள் அழகாக உள்ளன என்று வர்ணித்துள்ளார். மேலும் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதனால் பீதியடைந்த அப்பெண், அத்திப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் தஞ்சம் அடைந்தார். அந்த கடைக்குள்ளும் நுழைந்த பிரபாகர், அப்பெண்ணிடம் தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தனது செல்போன் மூலம் தகவல் அளித்து அப்பகுதிக்கு அந்தப் பெண் வரச் செய்தார். பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து வந்த பெண்ணின் கணவருடன், பொதுமக்களும் சேர்ந்து கொண்டனர். இதைக்கண்ட காவலர் பிரபாகர், தவறுக்காக வருந்தாமல், போலீஸ்காரர் என்ற தோரணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எனவே பிரபாகரை அப்படியே விட்டுவிடக் கூடாது என்று முடிவு செய்து, அவரின் மோட்டார் சைக்கிளை பொதுமக்கள் சோதித்தனர். அதில் மது பாட்டில் இருந்தது தெரிய வந்தது.
இதனால் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். இருப்பினும் காவலர் பிரபாகர், காவலர்கள் அணியும் சீருடையில் இருந்ததால் அவரை அடிக்கவோ, தாக்கவோ கூடாது என பொதுமக்கள் முடிவு செய்தனர். பின்னர் அவரை கோவில்பாளையம் காவல்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதுதொடர்பான விடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழக காவல்துறை எடுத்து வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் காவலர் ஒருவரே, பெண்ணை குடிபோதையில் துரத்திச் சென்ற சம்பவம் வேலியே பயிரை மேய்வது போல அமைந்துள்ளது. ஆதலால் சம்பந்தப்பட்ட காவலர் பிரபாகர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, காவல்துறை மீதான களங்கத்தை போக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாகுல்ஹமீது