சினிமாதமிழகம்

நடிகர் சங்கத் தேர்தல் முடிவை வெளியிட தடையாக இருக்கும் ஐசரி கணேஷ் : கருணாஸ்

பல பிரச்னைகளைக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவுகள் இன்று வரை அறிவிக்கப்படாமல் உள்ளது. விஷாலின் மீது கொண்ட அதிருப்தியினால் அவரது அணியில் இருந்து விலகிய அவரது நண்பர்கள் இயக்குநர் பாக்யராஜை நாடி புதிய அணியை உருவாக்கினர்.

நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் கொண்ட பாண்டவர் அணியுடன் சங்கரதாஸ் சுவாமி என்ற புதிய அணி போட்டியிட்டது. இந்த சங்கரதாஸ் சுவாமி என்ற புதிய அணிக்கு பாக்யராஜ் தலைமை வகித்தார். இந்த தேர்தல் பல குழப்பங்கள், பிரச்சனைகளுக்கிடையே நடைபெற்று முடிந்தது. ஆனால் இன்னும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

பெஞ்சமின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் என்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூரில் உள்ள சங்க உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களித்திருக்க வேண்டும். அப்படி ஒரு வேளை நேரில் வாக்களிக்க விரும்பினால் 7 நாட்களுக்கு முன்பே தகவலை தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் பின்னணியில் ஐசரி கணேஷ் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கருணாஸ் ஐசரி கணேஷை தாக்கிப் பேசியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு பிரபல தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த கருணாஸ் கூறும் பொழுது, “நடிகர் சங்கம் தேர்தல் நடந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதேபோல் நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் 75 சதவிகிதத்திற்கு மேல் முடிக்கப்பட்டு பணமில்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது. சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஓய்வு ஊதியம் கொடுப்பதற்குக் கூட நிதியில்லாமல் தடுமாறி வருகிறது. இந்த சூழலில் சங்கத்திற்கு எதிராக சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வழக்கு தொடர்ந்தவர்கள் சாதாரண நடிகர்கள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கில் பங்கேற்க ஒவ்வொரு முறையும் லட்சங்களில் செலவாகும். அவர்களால் இந்த தொகையை எப்படி செலவு செய்ய முடியும். அவர்கள் பின்னணியில் இருப்பது யார். இவர்கள் செய்வது எந்த வகையில் சரியாக இருக்கும்“. “சங்கத்தின் மீது அக்கறையுள்ள எந்த ஒரு உறுப்பினரும் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

சங்க உறுப்பினர்களின் நலனுக்காக இவர்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். இதில் யாரும் சுயநலமாக செயல்படக் கூடாது. ஐசரி கணேஷ் ஈகோ பார்க்காமல் சங்கத்தின் வளர்ச்சிக்காக ஒன்று சேர்ந்து சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பணத்தாலும் அதிகாரத்தாலும் பதவியாலும் ஒருவன் எதை வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று நினைக்க கூடாது. “50 பேருக்கு 100 பேருக்கு உதவித்தொகை கொடுப்பதாக சொல்லும் ஐசரி கணேஷ் ஏன் சங்கத்தின் கட்டிடப் பணிகளை முடிக்க உதவக் கூடாது. நீங்கள் விருப்பப்பட்டு தானே தேர்தலில் விஷாலை எதிர்த்து போட்டியிட்டீர்கள், தற்போது எதற்காக தேர்தலின் முடிவை அறிவிக்க விடாமல் தடுக்கிறீர்கள், இப்போது வழக்கு போட்டிருப்பதால் யாருக்குமே நல்லது நடக்கவில்லையே, ஒய்வூதியமும் அளிக்காமல், சங்க கட்டிடமும் நடக்கமால் இருக்கிறதே” என்று காட்டமாக பேசியுள்ளார் நடிகர் கருணாஸ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button