இன்று கேரளா… நாளை தமிழகம்
தண்ணீரில் மிதந்த கேரளா இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்கும் என்றே யோசிக்க முடியாத அளவுக்கு இயற்கையின் யுத்தம் தொடர்ந்தது. கேரளாவில் உள்ள பதினான்கு மாவட்டத்தில் பன்னிரண்டு மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்தது.
திருச்சூர் மற்றும் காசங்கோடு மாவட்டங்களில் மட்டும்தான் குறைந்த அளவு மழை பெய்தது. இதுவரை முன்னூறுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் மூன்று லட்சத்தி பதினைந்தாயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் வீடுகளை இழந்தவர்கள். கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் மின்சாரம் தடைபட்டு இருந்தது. நிலச்சரிவுகள் தொடர்ந்ததால் நிம்மதியற்ற வாழ்க்கை சூழ்நிலையில் மக்கள் தவித்தனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தில் இருந்தும் உதவிகள் அம்மாநிலத்தை நோக்கி குவியத் தொடங்கின. கேரளாவில் நடந்த வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்தது மத்திய அரசு.
இது ஏதோ கேரளாவுக்கு மட்டும் ஏற்பட்ட பாதிப்பு மட்டுமல்ல. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் அதிகப்படியான மழை பெய்து வந்தது. கர்நாடகா மழை காரணமாக கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி மேட்டூர் நிரம்பியது. காவிரியிலும், கொள்ளிடத்திலும் தண்ணீர் சீறிப்பாய்ந்தது.
எனவே எங்கோ கேரளாவில், கர்நாடகாவில் தானே மழை, வெள்ளம் என தமிழகம் கவலைப்படாமல் இருக்க முடியாது. இயற்கையை இனியாவது மதித்து நடந்து கொள்ள வேண்டும். மழைகளை குடைந்து சுரங்கங்கள், அணைகள், கேளிக்கை விடுதிகள், எஸ்டேட்கள், பங்களாக்கள் அமைப்பதால்தான் நிலச்சரிவுகள் அதிகம் நடக்கத் தொடங்கின. இதுபற்றி கவலைப்படாமல் மேற்குத் தொடர்ச்சி மலைகளை சிதைத்து வருகிறார்கள் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்கள். தென்னிந்தியாவில் உயிர்கள் தழைத்து வாழ வேண்டுமானால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் துளியளவு கூட பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் இல்லை என்றும் இப்போது நிலச்சரிவுகள் ஏற்பட அரசாங்கங்களின் திட்டங்கள்தான் காரணம் என்றும் இவர்கள் சொல்கிறார்கள். கேரளாவில் மிகக் கவலைக்குறிய வகையில் நிலைமை உருவானதற்கு பின்னாலும் நியூட்ரினோ போன்ற திட்டங்களை செயல்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள். கடந்த ஜூலை மாதம் புவனேஸ்வரில், யமுனையில் வெள்ளம் ஏற்பட்டது. பெங்களூரும், மும்பையும் அடிக்கடி வெள்ளம் சூழும் பகுதிகள். அதாவது குறுகிய நேரத்தில் அதிகப்படியான மழைப் பொழிவுகள் இருக்கும் இடத்தில் வெள்ளம் தவிர்க்க முடியாதது.
2015ல் சென்னையில் வெள்ளத்தைப் பார்த்தோம். அதன்பிறகும் பாடம் கற்கவில்லை நாம். தமிழகத்திற்கான பருவநிலைக் கொள்கை திட்டம் வகுக்கப்பட வேண்டும். காலநிலையை மாற்ற முடியாது. ஆனால் கால நிலைமைக்கு நாம் தயாராக வேண்டும். கிராமப்புற வடிகால்கள் தூர்வாரப்பட வேண்டும். புதிய வடிகால்கள் உருவாக்கப்பட வேண்டும். நகர வடிகால்கள் சரிசெய்யப்பட வேண்டும். கிராமப்புற வடிகால்கள் தூர்வாரப் படவேண்டும். புதிய வடிகால்கள் உருவாக்கப்பட வேண்டும். நகர்மயமாதல் என்பதை சுற்றுச்சூழல் மயமாதலாக கவனத்தில் கொள்ள வேண்டும். கடற்கரை மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதை மனதில் கொண்டு திட்டமிடுதல் வேண்டும். கேரளாவிற்கு நிதி உதவி செய்ததோடு சேர்ந்து தமிழக அரசு இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
- கோடங்கி