இந்தியாதமிழகம்

மதரீதியான காழ்ப்புணர்ச்சி, வெறுப்பை விதைப்பது நாட்டிற்கு நல்லதல்ல…

பாஜக தலைவர்களின் பிள்ளைகள், ஹார்வர்டு, கேம்ப்ரிட்ஜ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் படித்து வருகிறார்கள்.

கர்நாடகாவின் மாண்டியா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவர் பர்தா அணிந்து சென்றுகொண்டிருக்கிறார். அவரைச்சுற்றி காவி உடையணிந்த மாணவர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கூச்சலிட்டு அந்த பெண்ணை நோக்கி முன்னேறிக்கொண்டே கோஷங்களை எழுப்புகின்றனர். அந்த மாணவி அவர்களை கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருக்கிறார். அப்போது அவர், “நான் பர்தா அணிந்திருந்தால் என்ன பிரச்சனை?” என கேட்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தது. முன்னதாக கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் பர்தா அணிந்து மாணவிகள் பள்ளிக்கு வரக்கூடாது என சர்ச்சை எழுந்தது. இதையடுத்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெறும் இந்த சம்பவங்கள் குறித்து பேசிய திமுக மாநிலங்களவை எம்.பி., கனிமொழி, ”தனிப்பட்ட நபர்களுக்கு அவர்களுடைய நம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு. மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், தனியொருவர் அவருடைய மத நம்பிக்கைகளை பின்பற்றுவதை ஜனநாயக நாட்டில் யாரும் தடை செய்ய முடியாது. அப்படி செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

தென்னிந்தியாவை எடுத்துக் கொண்டால், குறிப்பாக இந்து பெண்கள் தலையை மூடிக்கொள்வது கிடையாது. ஆனால், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள பெண்கள் தலையை மூடிக்கொள்வது அவர்களின் வழக்கம். அப்படியிருக்கும்போது, ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டில் வாழும்போது, தலைமூடியை மறைக்ககூடாது என கூறுவது, அவர்களின் நம்பிக்கையின்படி வாழும் உரிமை மறுப்பது போல் ஆகாதா? அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் படி அவர்கள் வாழக்கூடாதா?.

ஆகவே ஒருவரின் நம்பிக்கையை யாரும் தடை செய்ய முடியாது. நிச்சயமாக மத ரீதியான, காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு ஆகியவற்றை விதைப்பது நாட்டிற்கு நல்லதல்ல. இது போன்ற சம்பவங்கள் ஒருநாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் சித்தாந்தம் தேசத்துக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. அவர்கள், தங்களுடைய அரசியலுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு தற்போது கர்நாடகாவில் நடக்கும் சம்பவங்கள் தான் உதாரணம். மாணவர்கள் மாணவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் மதவாதிகளாக இருக்க கூடாது. படிக்க வரும் மாணவர்களுக்குள் மதவெறியை ஊட்டும் செயலை பாஜக செய்து வருகிறது. இன்றைக்கு கர்நாடகாவில் நடக்கிறது என நாம் அலட்சியமாக இருந்தால், நாளை தமிழகத்திலும் நடக்க கூடும். ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு பழக்க வழக்கம் உண்டு.

கர்நாடக அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இதுபோன்ற கீழ்தரமான, அருவருப்பான விஷயங்களில் ஈடுபடுபவர்கள் யாரும் பாஜக தலைவர்களின் பிள்ளைகள் அல்ல. பாஜக தலைவர்களின் பிள்ளைகள், ஹார்வர்டு, கேம்ப்ரிட்ஜ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் படித்து வருகிறார்கள். எளிய பின்னணி கொண்ட, அடித்தட்டு மக்கள் தான் பலிகடாவாக்கப்படுகிறார்கள். இது போன்ற மாணவர்களின் மனதில் மதவெறி ஊட்டி, அவர்களின் வாழ்க்கையை முழுவதும் சீரழித்துவிடுகிறார்கள்.

உண்மையில் அந்த பெண்ணின் மனநிலையை எண்ணிப்பாருங்கள். அத்தனை பேர் சுற்றியிருக்கும்போது அந்த பெண்ணுக்குள் உருவாகும் பதட்டத்தை நினைத்துப்பாருங்கள். கல்லூரிக்குள் நுழையும் ஒரு பெண்ணை இத்தனை பேர் அச்சுறுத்தும்போது, நாளை எப்படி அந்த பெண் கல்லூரிக்கு செல்ல முடியும். இது கடுமையான கண்டனத்திற்கு உரியது.

மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், ”பாஜக வெறுப்பு பிரசாரத்தில் தான் கட்சியை வளர்த்திருக்கிறார்கள். ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு பயன்தரும் எந்த திட்டமும் கிடையாது. வெறுப்புணர்வை பரப்புவது, கற்பனையான காணொலிகளை பரப்பி, அரசியல் ஆதாயத்தை தேட முயற்சிக்கிறார்கள்.

அண்மையில் தமிழ்நாட்டில் அரியலூர் மாணவி விவகாரத்தில் பொய்யான காணொலியை பரப்பி அரசியல் ஆதாயத்தை தேட முயன்றார்கள். அதேபோல, கர்நாடகாவில் பர்தா விவகாரத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். பர்தா என்பது எத்தனையோ ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு, பின்பற்றப்படும் ஒன்று. அரசியலமைப்பின் 25வது பிரிவு எந்த ஒரு மதத்தை, கடைபிடிக்கவும், பின்பற்றவும் உரிமை தந்திருக்கிறது. பர்தா விவகாரத்தில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் தெரிவித்து வருவது ஆரோக்கியமான போக்கு” என்றார்.

உதுமான்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button