18 ஆண்டுகளுக்கு பின் கைவிடப்பட்ட சென்ட்ரல் – எழும்பூர் ரயில் நிலைய இணைப்பு திட்டம்!
மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை எழும்பூரில் இருந்தும், மேற்கு மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு சென்ட்ரலில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்ட்ரல் – எழும்பூர் இடையே இரண்டரை கிலோ மீட்டர் தூரமே இருந்தாலும் சுமார் 11 கிலோ மீட்டர் சுற்றி சென்னை கடற்கரை ரயில் நிலையம் வழியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வெளியூர் செல்லும் பொதுமக்கள் பேருந்து மற்றும் மின்சார ரயில்கள் உள்ளிட்டவைகள் மூலம் ரயில் நிலையங்களுக்கு மாற வேண்டியிருப்பதால்,எழும்பூர் – சென்ட்ரல் ரயில் நிலையங்களை இணைக்கும் திட்டத்திற்கு கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் அடிக்கல் நாட்டினார். ஆனால், அதிக செலவு, குறைந்த வருவாய் காரணமாக தெற்கு ரயில்வே இந்த திட்டத்தை கைவிட்டுள்ளது.
மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மற்றும் பழைய சிறைச்சாலை பகுதிக்கு சந்தை மதிப்பிற்கு இழப்பீடு உள்ளிட்டவை காரணமாக தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
மேலும், மெட்ரோ ரயில் திட்டம், கடற்கரை – எழும்பூர் பறக்கும் சாலை திட்டங்களால் சென்ட்ரல் – எழும்பூர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்பில்லாமல் போயுள்ளது.