ரேஷன் அரிசி கடத்தலில், பலே கில்லாடி செஞ்சி சண்முகம் கைது ! 35 டன் ரேஷன் அரிசி, வாகனங்கள் பறிமுதல்
தமிழ்நாடு அரசு குடிமைப் பொருட்கள் வழங்கல் துறையின் சார்பில், பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கும் ரேஷன் அரிசியை கடத்தும் கும்பல் சம்பந்தமாக, கடந்த மே 9 ஆம் தேதி பிரபல ரேஷன் அரிசி கடத்தலில் பலே கில்லாடியான செஞ்சி சண்முகம் பற்றி ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீசார், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், வேலூர், காட்பாடி திருவலம் EB சந்திப்பு அருகே டாரஸ் லாரியையும், டொயோட்டா கிளான்சா சொகுசு காரையும் மடக்கி சோதனை செய்தபோது, லாரியில் 35 டன் ரேஷன் அரிசி இருந்ததைக் கண்டுபிடித்து, உரிமையாளர் செஞ்சி சண்முகம், கார் ஓட்டுநர் மோகன், லாரியின் உரிமையாளரும், ஓட்டுநருமான சங்கர், கிளீனர் ஹரிகிருஷ்ணன் ஆகியோரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட செஞ்சி சண்முகம் ( த/பெ காண்டீபன் ) பல காலங்களாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளி என்பதும், அவர் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக ரேஷன் அரிசியை வாங்கி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில், பாபு ( எ ) ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத அரிசி ஆலையில் பதுக்கி வைத்து, கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டைக்கு கடத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 35 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பாபு எ ராஜமாணிக்கம் உள்ளிட்ட அனைவரும் கைது செய்துள்ளனர்.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு, காவல்துறை தலைவராக கே. ஜோஷி நிர்மல் குமார் பொறுப்பேற்ற பிறகு, தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு, இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த துறையில் குண்டர் சட்டத்தின் கீழ் ஏராளமான வழக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உத்தரவின் பேரில், கோவை மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் ( பொறுப்பு ) சந்திரசேகரன் மேற்பார்வையில், சிறப்பாக செயல்பட்டு கடத்தல் கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் பலே கில்லாடியான செஞ்சி சண்முகம், தனது வழக்கமான முகம் போலீசாருக்கு பழக்கப்பட்ட முகம் என்பதால், மீசையை எடுத்துவிட்டு இந்த கடத்தலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. ஏற்கனவே இவர் பற்றிய செய்தியை வெளியிட்டபோது, இவரது மகள் வழக்கறிஞர் என்கிற பெயரில் நம்மை தொடர்பு கொண்டு, எனது தந்தை திருந்தி விட்டதாகவும், கடத்தலில் ஈடுபடுவதில்லை எனவும் மிரட்டல் தொனியில் பேசினார். பின்னர் விசாரித்ததில் தற்போதுதான் தனியார் கல்லூரியில் சட்டப் படிப்பை படித்து வருவதாக தெரியவந்தது. அவரது செயல்பாடுகளையும் பல்லாவரம் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
மேலும் விசாரித்தபோது.. செஞ்சி சண்முகத்தின் மகன் மீதும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்கிறார்கள். சண்முகம் விழுப்புரம் அருகேயுள்ள ஆவியூரில் ஏராளமான நிலபுலன்கள், செஞ்சியில் ஆடம்பரமான பங்களா கட்டியுள்ளார். மேலும் பல்லாவரம் பகுதியிலும் பங்களா வீட்டில் வசித்து வருகிறார் என்கிறார்கள். ஒருகாலத்தில் இவர் சாரய தொழிலில் கொடிகட்டிப் பறந்ததால், அப்பகுதியில் இவரை சாராய சண்முகம் என்றும் அழைக்கிறார்கள்.
– கே.எம்.எஸ்